விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட் பார்ம் அருகில் ஒரு வார காலமாக சரக்கு ரயில் நிறுத்தி வைத்திருப்பதால் ,பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் பொதுமக்கள் அவதி.விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை தேவை என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
விக்கிரவாண்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ,விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள் தினமும் பணி நிமித்தம் காரணமாக சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு ரயிலில் சென்று வருகின்றனர் .விக்கிரவாண்டி ரயில்வே ஸ்டேஷனில் 4 ரயில்வே இருப்பு பாதைகள் உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் மேற்கு புறத்திலுள்ள ரயில்வே நடைபாதை அருகில் சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் ஒரு நிமிடம் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம் .கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த ரயில்வே இருப்பு பாதையில் நடைபாதையை அருகிலேயே சரக்கு ரயில் பெட்டிகளை நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சென்னை நோக்கி செல்லும் ரயில் மூன்றாவது ரயில் பாதையில் நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் பயணிகள் வசதியாக ரயிலில் ஏற ,இறங்க நடைபாதை மேடை இல்லாததால் வயதான முதியோர்கள்,சிறுவர்கள் ,பொதுமக்கள்,மாற்றுத்திறனாளிகள் யாரும் அவசர ,அவசரமாக ரயிலில் ஏறவும், இறங்கவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் . மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் இரண்டாவது ரயில் பாதையில் பொதுமக்கள் நிற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது சில நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து ,நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்பெட்டிகளை அருகிலுள்ள ரயில்வே சந்திப்புகளில் மாற்றி நிறுத்தினால் பொதுமக்கள் பயணிகள் ரயிலில் ஏற வசதியாக இருக்கும்.இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இனியும் ரயில்வே நிர்வாகம் காலம் கடத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகின்றனர்.விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் நடைபாதையோரம் சரக்கு ரயில் பெட்டி நிறுத்தியுள்ளதால் பயணிகள் ரயிலில் ஏற இருப்பு பாதையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது .நடவடிக்கை எடுக்குமா ரயிவே நிர்வாகம்?