Vellore: காவலாளிகளை தாக்கி விட்டு , 6 சிறுவர்கள் தப்பியோட்டம் , பரபரப்பு

0
90
போலீசார் நேரில் விசாரணை

கூர்நோக்கு பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவர்களை பிடிக்க , 4 தனிப்படை .

வேலூர் அரசு பாதுகாப்பு இல்ல காவலாளிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற 6 சிறுவர்களை பிடிக்க , 4 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர் வேலூர் மாவட்ட காவல்துறையினர் .

இந்த சம்பவம் குறித்து நீதிபதி பத்மகுமாரி , போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர் .

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள ஆற்காடு சாலையோரம் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இதன் கண்காணிப்பாளராக விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த பாதுகாப்பு இல்லத்தில் திருட்டு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சென்னையை சேர்ந்த சிறுவன் கடந்த 25-ந் தேதி தன்னை வேறு இல்லத்துக்கு மாற்றக்கூடாது என்று கூறி கட்டிடத்தின் மேலே ஏறி ரகளையில் ஈடுபட்டான்.

அதிகாரிகள் சம்பவ இடத்தில விசாரணை

மேலும் அங்குள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., மின்விளக்குகளை கம்பால் அடித்து உடைத்து பரபரப்பை ஏற்படுத்தினான் . இளஞ்சிறார் நீதித்துறை நீதிக்குழும நீதிபதி பத்மகுமாரி சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவன் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். இதுதொடர்பாக பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் மற்றும் சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வழக்கம்போல் இல்ல பாதுகாப்பு பணியில் குமரவேலு, பிரபு உள்பட 3 காவலாளிகள் ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட சென்னை சிறுவன் உள்பட 6 பேர் அறையை விட்டு வெளியே வந்தனர்.

அவர்கள் திடீரென கை மற்றும் கட்டையால் சரமாரியாக ஒரு காவலாளியை தாக்கினர். அவரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற 2 காவலாளிகளும் அங்கு விரைந்து சென்றனர். அவர்களையும் 6 பேரும் சரமாரியாக தாக்கி விட்டு பின்பக்க சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பியோடினர். இதில், காயமடைந்த காவலாளிகள் இச்சம்பவம் குறித்து  இல்ல கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும்  வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு செல்போனில் புகார் தெரிவித்தனர் . அதைத்தொடர்ந்து போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர். பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உதவி கலெக்டர் கவிதா ஆகியோர் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சிறிதுநேரத்தில் இளஞ்சிறார் நீதித்துறை நீதிக்குழும நீதிபதி பத்மகுமாரி அரசு பாதுகாப்பு இல்லத்துக்கு சென்று காவலாளிகள், பாதுகாப்பு இல்ல அலுவலர்கள், அங்குள்ள சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சென்னையை சேர்ந்த 2 பேர், திருவள்ளூரை சேர்ந்த 2 பேர், சேலம் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 6 பேர் கூட்டாக காவலாளிகளை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

அவர்களை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகிறோம். 6 பேரில் 4 பேர் ஆட்டோவில் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். எனவே அவர்கள் அந்த பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் பதுங்கியிருக்கலாம் என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம். அனைவரையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here