தமிழ்நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடையும் என்பதால் பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் தமிழக மக்கள் சார்பாக பாராட்டி, வாழ்த்துகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதால் தமிழகத்தின் வளர்ச்சி உறுதிப்படும் என்பதால் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். பாரதப் பிரதமர்நரேந்திர மோடி தமிழக வருகையானது தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுவதை வெளிப்படுத்துவதால் பாராட்டுகிறேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 2.81 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவது தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும்.
திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதியை மாணவச்செல்வங்களுக்கு அர்ப்பணிக்கிறார். தமிழகத்தின் தொடர் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக மத்திய அரசு செயல்படுவதற்கு எடுத்துக்காட்டாக, இன்று பாரதப் பிரதமர் அவர்கள் திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பிலான விமானநிலைய புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்.

மேலும் சாலைப் போக்குவரத்தில் விரிவாக்கம், ரயில் போக்குவரத்தில் விரிவாக்கம், மின் மயமாக்கம், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதும் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைவதால் மத்திய அரசு வாழ்த்துக்குரியது, நன்றிக்குரியது என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களாக, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான உந்துதலாகவும் பாரதப் பிரதமரின் வருகை அமைகிறது.
எனவே பிரதமர் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம் தமிழக மக்களின் நலனும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடையும் என்பதால் பாரதப் பிரதமர் அவர்களையும், மத்திய அரசையும் தமிழக மக்கள் சார்பாக பாராட்டி, வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.