முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு விடியா திமுக அரசை கண்டிக்கிறேன். புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கும் நோக்கில் சிவில் வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்!” என்று தெரிவித்துள்ளார்.