செஞ்சியில் பிடிபட்ட கரடி தனி நபரால் வளர்க்கப்பட்டதா ?

2 Min Read
கரடி மயங்கி கிடந்தது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகர், கோனை புதூர், சோமசமுத்திரம் ஆகிய மலைக்குன்றுகள் சார்ந்த பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இதைபார்த்த இளைஞர்கள் சிலர் நடமாட்டத்தை வீடியோ எடுப்பது மற்றும் அதற்குச் சற்று தொலைவிலிருந்து செல்ஃபி  எடுத்து அந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வனத்துறை அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டத. இதையடுத்து செஞ்சி வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோனைபுதூர் பகுதியில் கரடியை பிடிக்க பலாப்பழங்களுடன் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெருங்காப்பூர் கோட்டிக்கல் பாறை அருகே அந்த கரடி மயங்கி கிடந்தது.

கரடியை கூண்டில் அடைத்தனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செஞ்சி வனத்துறையினர், வனக்காப்பாளர்கள் குழுவினருடன் நேரில் சென்று கரடியை பார்வையிட்டனர். அப்போது கரடியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது. இதையடுத்து அவர்கள் கால்நடை மருத்துவர்கள்  மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஊழியர்கள்  ஆகியோர் மூலம் கரடியை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த கரடியை கூண்டில் அடைத்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அந்த கரடியை பாதுகாப்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து வன அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த கரடியின் கழுத்தில் இரும்பு வளையம் போட்டதற்கான தழும்புகள் உள்ளன. மேலும் நகங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த கரடி காட்டில் வளரவில்லை. இதனை யாரோ வளர்த்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ஏதேனும் காரணத்துக்காக கரடியை இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டு சென்று இருக்கலாம். வளர்ப்பு கரடி என்பதால், அதுவால் இங்கு இரையை தேட தெரியவில்லை. மேலும் கிராம பகுதியில் கரடி சுற்றிக்கொண்டிருந்த போது, அதனை மாடு ஒன்று முட்டியதாக தெரிகிறது. இதில் கரடியின் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கரடி மயங்கி விழுந்துள்ளது என்றார். இருப்பினும் பல நாட்களாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிப்பட்டதை அறிந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Share This Article
Leave a review