வன அலுவலர் பகான் ஜெக்தீஷ் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு – ஜி.கே.வாசன் பாராட்டு

2 Min Read
வன அலுவலர் பகான் ஜெக்தீஷ்

யுனெஸ்கோ விருதுக்கு தேர்வான வன அலுவலர் பகான் ஜெக்தீஷ்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோள காப்பக விருதுக்கு இராமநாதபுர மாவட்ட வன அலுவலர் பகான் ஜெக்தீஷ் சுதாகர் தேர்வாகியிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது.

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனம் வழங்கும் உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெக்தீஷ் பகான் தேர்வாகி தமிழ்நாட்டிற்கு ஏன் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநர் பகான் ஜெக்தீஷ் சுதாகர் அவர்கள் கடின உழைப்பாளி. அந்த வகையில் உயிர்க்கோள காப்பகத்தின் காப்பாளராக, ஐ.எப்.எஸ். அதிகாரியாக வனத்துறையில் திறம்பட பணியாற்றுபவர்.
குறிப்பாக மன்னார் வளைகுடா பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவரை உலக அளவில் புகழ் பெற வைத்திருக்கிறது.

அதாவது “நிலையான வாழ்வாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சமூக அடிப்படையிலான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” குறித்த தனது ஆராய்ச்சியை மன்னார் வளைகுடா பகுதியில் மேற்கொண்டார்.

மன்னார் வளைகுடாவை பல்லுயிர் பாதுகாப்பு வளையமாக முன்னெடுப்பதில் அளப்பரிய பங்காற்றிய அவரது ஆராய்ச்சியால் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். யுனெஸ்கோவின் மைக்கேல் பட்டீஸ் விருது இந்தியாவிற்கு முதன்முறையாக அதுவும் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருப்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது. சர்வதேச அளவில் விருதுக்கு தேர்வான பகான் ஜெக்தீஷ் சுதாகர் அவர்களால் தமிழக வனத்துறைக்கும் புகழ் சேர்கிறது.

அவர் மென்மேலும் சிறந்து விளங்கி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்த்து, வாழ்வில் மேம்பட வேண்டும். தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குனரும், வனவிலங்கு காப்பாளருமான இந்திய வன அதிகாரி (Indian Forest Officer) பகான் ஜெக்தீஷ் சுதாகர், பாதுகாப்புத் துறையில் பாராட்டத்தக்க பங்களிப்பைச் செய்து, நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதால் த.மா.கா சார்பில் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review