நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.போதிய மழை பெய்யாததால் அருவி-நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில் இம்மலையில் உள்ள கருங்கல்கசம் பீட், மற்றும் ஆனைக்கல் பொடவு வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ பரவி விபத்து ஏற்பட்டது.மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மள, மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி பற்றி எரிந்து வருகிறது.
தீ விபத்தால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் கருகி வருகிறது.மேலும் வனவிலங்குகளும் பாதிப்குள்ளாகி வருகின்றன.இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தீ கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.