விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு நாவல் ஊத்துப் பகுதியில் 2வது நாளாக காட்டு தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி எரிந்து வருகிறது. நேற்று ஆடி அமாவாசை என்பதால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் கீழே இறங்க முடியாமல் மலை மேல் தங்கினர். ஆனால், பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
கட்டுக்குள் வந்த நிலையில் பக்தர்கள் மலை அடிவாரத்திற்கு வந்து கொண்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஓரளவிற்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்ட 4வது நாளான இன்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதி மதுரை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதி என்று கூறப்படுகிறது. சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு மாதங்களாக மழை இல்லாததாலேயே இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மழை இல்லாததால் காரணத்தால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி இந்த வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்பட்டது.
மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் இலைகள், மூங்கில்கள் உரசி தீப்பற்றி இருக்கலாம் காட்டுத் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாலை 6 மணியளவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பே பக்தர்கள் பலர் மலை அடிவாரத்துக்கு சென்று விட்டதாகவும், இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.இதில், 200 ஏக்கர் பரப்பளவில் இருந்த அரிய வகை மூலிகைகள், செடி, கொடிகள், நீண்டு வளர்ந்த புற்கள் கருகின.
இச்சம்பவம், வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட தீயா அல்லது சமூக விரோதிகள் வைத்த தீயா என்பது குறித்து வத்திராயிருப்பு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.