அதிமுகவை பொறுத்தவரை ஜாதி , மத பேதமற்ற ஒரு கட்சியாகும் , கூட்டணி வேறாக இருந்தாலும், கொள்கை நிலையானது என்ற நிலைபாட்டில் செயல்பட்டு வருவதாக சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
சேலத்தில் சுமார் 1000 இஸ்லாமியர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , இஸ்லாமியர்கள் மத்தியில் பேசும்போது, கடந்த காலங்களில் திட்டமிட்டு , அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு, கொள்கை என்றும் நிலையானது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறு பிரச்சனை கூட இல்லாமல் பாதுகாத்த ஆட்சியாக அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பேணி காத்தார். 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பாதுகாத்தது, அதிமுக ஆட்சியில் தான்.

கூட்டணி வேறு , கொள்கை வேறு. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது நிலையாக இருக்கும் அதிமுக கொள்கை எப்பொழுதும் நிலையானது. அதிமுக- வுக்கு பொருத்தவரை மதம் ,ஜாதி கிடையாது. ஆண் பெண் என்ற இரண்டே ஜாதி மட்டும் தான். இது ஜனநாயக நாடு, இதில் யாருக்கும் யாரும் அடிமை கிடையாது.
அதிமுக எப்பொழுதும் அதை பின்பற்றி இருக்கும்.அதிமுக ஆட்சி காலத்தில் நாகூர் தர்காவில் உள்ள குளக்கரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உடனடியாக 4 கோடி ரூபாய் மதிப்பில் அதை சீர் செய்து கொடுத்தேன். ஹச் புனித பயணிகளுக்கு நிதி நிறுத்தப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் 6 கோடி 8 கோடியாக உயர்த்தி கொடுத்தோம். ரமலான் நோன்புக்கு கஞ்சி காய்ச்ச 5,600 டன் அரிசி வழங்கியது, அதிமுக ஆட்சியில் தான்.
இப்படி இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த ஆட்சி. தான் அதிமுக ஆட்சி என்றார். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டது, என்று தெரிந்தவுடன் , ஒருவித பயம் ஏற்பட்டு ,தற்போது இஸ்லாமியர்கள் மீது திமுக மட்டும் தான், அக்கறை செலுத்தி வருவதாக முதலமைச்சர் பேசுகிறார். நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைத்து மதங்களில் உள்ளவர்ளையும் நேசிக்கக் கூடியவர் என்ற எடப்பாடி பழனிச்சாமி , தன்னை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எளிதாக அணுகி தங்கள் பிரச்சினைகளை கூறலாம் என்றும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக எப்பொழுதும் மக்களுக்காக நன்மை செய்யும் என்றார்.
நாங்கள் பாஜகவில் இருந்து முழுமையாக விலகி விட்டோம். ஆனால் சிலர் தற்போதும் அதிமுக , பாஜக-வின் A டீம், B டீம் என்று கூறுகின்றனர். நாங்கள் தான் அதிமுக என்ற ஒரிஜினல் டீம் என்று உறுதியுடன் தெரிவித்தார். திமுக 1998ல் பாஜகவோடு கூட்டணி அமைத்து , பதவியை அனுபவித்தனர். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன், கூட்டணிக்காக கொள்கையை விட்டுத்தர மாட்டோம் எனக் கூறி விலகினார்.

எனவே மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக. ஆனால் தற்போது காவிரியில் தண்ணீர் விடாததால் டெல்டா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸோடு முதல்வர் ஸ்டாலின் பேசி , தண்ணீரை பெற்றுத் தராததால் இன்று குருவை சாகுபடி மூன்று லட்சம் ஏக்கரில் பாதிப்படைந்துள்ளது.
கர்நாடகா அரசிடம் முறையாக பேசி பார்த்து டிஎம்சி பெற்று தந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற அவர் , திமுக ஆட்சியில் வருமானம் குறைந்து விட்டது, விலைவாசி அதிகரித்து விட்டது , போதைப் பொருள் விற்பனை, கஞ்சா விற்பனை அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என குற்றம்சாட்டினார்.