வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ‘தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.முன்னதாக இன்று நடைபெற்ற துவக்க விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி,வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன்,
முதல் முறையாக தமிழ்நாட்டில் யானைகளுக்கு கருத்தரங்கம் நடத்தியுள்ளோம். இதில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். யானையின் வாழ்விடம், வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. இது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.இந்தியாவிலயே இதுபோன்ற கருத்தரங்கம் எங்கும் நடக்கவில்லை.வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.அதில் குழு அமைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் யானை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளோம்.அவுட்-காய் ( நாட்டு வெடி ) போன்ற விடயங்களை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வனத்துறையில் ஈடுபடுத்தபட்டுள்ளது. காடுகளை பாதுகாக்க நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
வன ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.தடாகம் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.