தஞ்சாவூருக்காக இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை எலும்புக்கூடு.

3 Min Read
  • தஞ்சாவூருக்காக இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை எலும்புக்கூடு. மனித எலும்புக்கூட்டை அறியாத இந்தியாவிற்காக வந்த முதல் எலும்புக்கூடு தற்போது ஆந்திராவில் இருப்பதாகவும், தஞ்சாவூருக்கு சொந்தமான அதனை மீட்டு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தஞ்சையை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி புரிந்தனர். இதில் சோழர்களுக்கு அடுத்தபடியாக குறிப்பிடத்தக்க அரசராக விளங்கியவர் இரண்டாம் சரபோஜி. அவர் உருவாக்கிய சரஸ்வதி நூலகம் உலக பிரசித்தி பெற்று இன்றளவும் சிறந்து விளங்குகிறது.

- Advertisement -
Ad imageAd image

படிப்பின் மீது தீராத காதல் கொண்ட அவர் எண்ணற்ற நூல்களையும் – ஓலை சுவடிகளை சேகரித்த நூலகத்தை உருவாக்கியவர். அதில் குறிப்பாக எதிர்கால தலைமுறையினர் பயன் பெற வேண்டும் என்று சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நூலைகளை தொகுத்தும் – ஆய்வு செய்தும் பாதுகாப்பாக விட்டு சென்றுள்ளார்.

இன்றளவும் அதனை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் அப்போது ஆங்கில மருத்துவம் இந்தியாவில் அறிமுகம் இல்லாத நேரமாகும். எனவே ஆங்கில மருத்துவம் மூலமும் மக்கள் பயனடைய வேண்டும் என்று முடிவு செய்த சரபோஜி அதை குறித்து படிக்கவும் ஆய்வு செய்யவும் தொடங்கியுள்ளார். அப்போது ஒரு நோய் ஏற்படும் போது அதன் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் – மனித உடல் எவ்வாறு இருக்கும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கு என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

அதற்கு மனித எலும்புக்கூடு தேவை என்பதை உணர்ந்தார்.‌ அப்போது இந்தியாவில் கிறிஸ்துவர்கள் – இஸ்லாமியர்கள் மட்டுமே உடலை அடக்கம் செய்யும் நிலை இருந்தது. மன்னர் சரபோஜி நினைத்திருந்தால் தோண்டி உடலை எடுத்து இருக்க முடியும். ஆனால் அவ்வாறு தோண்டி எடுக்க முடியாத காலகட்டம் என்பதாலும் – அவர்களின் மனம் வருந்தும் என்பதாலும் இதற்கு மாற்று வழி ஒன்றை கண்டுபிடித்தார்.

எலும்புக்கூடு மாதிரி செயற்கையான ஒன்று இருந்தால் போதும் என்ற முடிவு செய்த மன்னர் சரபோஜி அதை போல் வடிவமைக்க வேண்டும் என இங்கிலாந்தில் உள்ள தனது நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து இங்கிலாந்தில் கிபி 1805 – 1810 கால கட்டத்தில் 104 கிலோ யானை தந்தங்கலால் 5.6 அடி அங்குலத்தில் ஒரு‌ செயற்கை எலும்பு கூடும், கருங்காலி மரத்திலான ஒரு செயற்கை எலும்பு கூடு உருவாக்கப்பட்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவின் கொல்கத்தாவிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் கொல்கத்தாவில் இருந்து மாட்டு வண்டியில் ஒரு வருட பயணத்திற்குப் பிறகு தஞ்சை அரண்மனைக்கு அந்த இரண்டு எலும்பு கூடுகளும் வந்து அடைந்தது. இந்த எலும்பு கூடுகளை வைத்து பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளாத ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரபோஜி மன்னரின் மறைவிற்குப் பிறகு 1910ஆம் காலகட்டத்தில் சரஸ்வதி மகாலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இதன் அருமை புரியாமல் அரண்மனை ஓரத்தில் தூக்கி போட்டுள்ளனர்.

இந்த நிலையில் 1929 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மனித உடற்கூறு பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணராவ் ஆய்விற்காக தஞ்சை சரஸ்வதி மகாலுக்கு வந்த போது இந்த எலும்பு கூடுகளை கண்டு இதனை விலை கொடுத்து வாங்கி சென்று அங்கு வைத்துள்ளார்.

பின்னர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் ஆகி சென்ற போது அந்த இரண்டு எலும்புக் கூடுகளையும் அங்கு எடுத்து சென்று வைத்துள்ளார். தற்போது வரை அந்த இரண்டு எலும்பு கூடுகளும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதுவரை மனித எலும்புக்கூடு எவ்வாறு இருக்கும் என்று இந்தியாவில் யாரும் பார்த்திராத நேரத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த இரண்டு செயற்கை எலும்பு கூடுகளும் காலத்தால் அழியாத பொக்கிஷம் என்றும் எனவே தஞ்சாவூருக்கே சொந்தமான இரண்டையும் ஆந்திர மாநிலத்திலிருந்து மீட்டு தஞ்சை அரண்மனைக்கு கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்,

இந்தியாவிலிருந்து கொள்ளையடித்து செல்லப்பட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவது போல இந்த இரண்டு எலும்பு கூடுகளையும் தஞ்சைக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review