பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் பல சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சிகளும் விசாரிக்க்ப்பட்டன.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர். அப்போது அரசு தரப்பில் வக்கீல் வைத்தியநாதன் ஆஜராகி, இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் வாதிட்டார்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.