தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைநகர் சென்னையில் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் திறந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “நாட்டினை பொருளாதார பலம் கொண்டு காக்கும் வணிகப் பெருமக்களைப் பாதுகாக்கும் கவசங்களாய் திகழ்பவை வணிகர் சங்கங்களே. அந்த வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தொடர்ச்சியாக வணிகர்களின் பாதுகாப்பிற்கும், நல்வாழ்விற்கும் நீண்டகாலமாக அரும்பணியாற்றி வருகிறது. தமிழ் வணிகப் பெருமக்களுக்குக் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளின்போது அவற்றுக்காகத் தீவிர போராட்டங்களை நடத்தித் தீர்வு காண்பதில் முன்னணியிலிருந்தது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பாகும்.

அதன் அடுத்த வளர்ச்சிப் படிநிலையாகத் தற்போது தலைநகரில் துவங்கியுள்ள இப்புதிய தலைமை அலுவலகம் பேரமைப்பின் நற்பணிகளில் புதிய வீரியத்தையும், வேகத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய அலுவலகத்தின் மூலம் மேலும் சிறப்பாகவும், வேகமாகவும், ஒற்றுமையுடனும் வணிகர்களின் நலனுக்கு பாடுபட எனது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.