- சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.
வியாசர்பாடி ரயில் நிலையம் அருகேயுள்ள BSNL குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த காக்கா பாலாஜியை, போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து துப்பாக்கியால் போலீசார் சுட்டதில் பலி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஏழுகிணறு பகுதியை மையமாகக் கொண்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் காக்கா தோப்பு பாலாஜி. புறா வளர்ப்பில் தொடக்கத்தில் ஈடுபட்ட பாலாஜி பின்னர் அடிதடி வழக்குகளில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் ‘செல்லப் பிள்ளையாக’ உருவெடுக்க, போலீசாருக்காக பிற ரவுடிகளிடம் மோதவும் தொடங்கியவர் காக்கா தோப்பு பாலாஜி. அந்த கால கட்டத்தில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி நாகேந்திரனுக்காக ‘அசைன்மெண்ட்டுகளை’ செய்யத் தொடங்கினான் காக்கா தோப்பு பாலாஜி. இந்த நாகேந்திரனும் அவரது மகனும்தான் தற்போது தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கி இருக்கின்றனர்.
இப்படித்தான் விஸ்வரூபம் எடுத்த காக்கா தோப்பு பாலாஜி, 2017-ம் ஆண்டு சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமது ரவுடி பட்டாளத்துடன் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது போலீசிலும் சிக்கிக் கொண்டு சிறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டார் பாலாஜி. அதுவும் வாக்குப் பதிவு நாளில் குழப்பத்தை ஏற்படுத்த ரவுடிகளுடன் பதுங்கி இருந்த போது துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்யப்பட்டார் பாலாஜி.

பாலாஜி மீது கொலை, கொள்ளை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வடசென்னையில் சுயம்பு ரவுடியாக உருவெடுத்த பாலாஜி, தடயமே இல்லாமல் கொலை செய்தவர்கள் பட்டியல் நீளும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். இந்த பின்னணி கொண்ட காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.