தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவை, அம்மாநில முதல் மந்திரி புறக்கணிப்பனிதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது .
செகந்தராபாத் – திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் தொடக்கவிழா, ரூ.11,355 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமருடனான நிகழ்ச்சியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
இதையடுத்து நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, தெலங்கானாவில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது. மாநில அரசின் ஒத்துழையாமை காரணமாக மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாகின்றன. தெலங்கானாவில் தவறான அரசு நிர்வாகத்திற்கும், ஊழலுக்கும் குடும்ப ஆட்சியே காரணம். ஒட்டுமொத்த மாநிலத்தின் அதிகாரமும் ஒரு சிலரது கைகளில் குவிந்துள்ளது. அவர்கள் விஷயத்தில் தெலங்கானா மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை சுட்டிக்காட்டிப் பேசிய நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் நரேந்திர மோடியையே குறிவைக்கிறார்கள். அவர்களுக்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை என்று விமர்சித்தார்.