செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்துள்ள மதூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் சாந்தி என்ற இருளர் சமூக பெண்ணை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார் . இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்தநிலையில் ரவி – சாந்தி தம்பதிக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்னர் ஒரு ஆன் குழந்தை பிறந்துள்ளது . வேலை கிடைப்பதை பொறுத்து ஒவ்வொரு ஊருக்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வாழ்ந்து வந்த தம்பதிகள் இருவரையும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் முயற்சியால் மீட்கப்பட்டனர். மேலும் கடந்த 18ஆம் தேதி முதல் உறவினர்களுடன் மதூர் கிராமத்தில் குடும்பத்தோடு தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் அதற்கு அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் கிராம அரசு செவிலியர் பவுனாத்தாள் என்பவர் ரவி மற்றும் அவர்கள் குடும்பத்திடம் வந்து உன்னிடம் எந்தவித அரசு அடையாள அட்டையும் இல்லை நீ இந்த ஊரை சார்ந்தவர் , உன் குழந்தை சம்பந்தமான பதிவுகள் எதுவும் இல்லை மருத்துவமனையில் என்னிடமோ எதுவும் இல்லை எனவே ஊரை விட்டு கிளம்பி போக வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
பிறந்து 14 நாட்கள் மட்டுமான கைக்குழந்தை வைத்துக்கொண்டு நான் எங்கே செல்வது என ரவி புலம்பியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் 21ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் அவர்கள் தங்கி இருந்த இருளர் காலனி குடியிருப்புக்கு வந்த கிராம அரசு செவிலியர் ஏன் ஊரை விட்டு காலி செய்யவில்லை என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அப்பொழுது வெள்ளை பேப்பரில் ரவியும் அவருடைய மனைவி சாந்தி ஆகியோரிடம் கைரேகை வாங்கியுள்ளனர்.

இதனை அடுத்து அங்கிருந்து கிளம்பி அருகாமையில் உள்ள சியாளம் என்ற கிராமத்தில் உள்ள மலை குன்றி தஞ்சம் அடைந்துள்ளனர். பாம்புகள் மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தலுக்கு நடுவே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் ரவி, இது குறித்து தங்களுக்கு உரிய இருப்பிடத்தை ஒதுக்கி தருமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் , வட்டாட்சியர் வாகனத்திலேயே குடும்பத்தை அனுப்பி வைத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதை குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்கள் தெரிவிக்கையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு செவிலியர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அடையாள அட்டை இல்லாமல் தவித்து வரும் குடும்பத்திற்கு உடனடியாக அடையாள அட்டை கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.