கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது, ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வந்தது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. அந்த சிசிடிவி காட்சிகளில் கருக்கா வினோத் மஞ்சள் சட்டை அணிந்தபடி, கையில் பையுடன் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனை வெளியிட்டு பேசிய சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் , “கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கமான குற்றவாளி. தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தன்னந்தனியாக பாதசாரி போல நடந்து வந்தது சிசிடிவி மூலமாக தெரிகிறது. ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய கருக்கா வினோத் முயற்சிக்கவில்லை.
தான் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட 4 பாட்டில்களில் இரண்டு பாட்டில்களை சர்தார் படேல் சாலையில் எதிர்புறத்தில் இருந்து எரிய முற்பட்டபோது அவை ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள பேரிகேட் அருகே விழுந்தன. மாறாக, ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை.
மேலும், குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, ஆளுநர் மாளிகை ஊழியர்களால் அவர் பிடிக்கப்படவும் இல்லை.

வினோத் தனியாகதான் வந்துள்ளார். அவருடன் யாரும் வரவில்லை. சென்னை பெருநகர காவல்துறை காவலர்கள் 5 பேரால் உடனடியாக பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுதான் நடந்த சம்பவம். ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் ‘பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசியதாகவும், வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாகவும் சொல்லப்பட்டுள்ளது’. அப்படி நடக்கவில்லை என்று கூறினார் சந்தீப் ராய் ரத்தோர்.
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், தமிழகம் பாதுகாப்பான இடம். இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை. இதனை நாங்கள் சொல்லவில்லை. பல தனிப்பட்ட சர்வேக்கள் சொல்லியுள்ளன என்று கூறினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சியினர் புகார் கூறியுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், “தமிழகம் பாதுகாப்பான இடம். இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை. இதனை நாங்கள் சொல்லவில்லை. பல தனிப்பட்ட சர்வேக்கள் சொல்லியுள்ளன. இன்றைய தேதியில் தமிழ்நாடும், சென்னையின் அமைதியான இடங்கள் என்று டிஜிபி தெரிவித்தார்.
சாதாரண மக்களில் இருந்து அனவைருக்கும் தமிழக காவல் துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று கூறிய சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையை பொறுத்தவரை சட்டம் ஒழுங்குக்கே முன்னுரிமை எப்போதும் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆளுநர் தரப்பில் சில புகார் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் முரண்பாடு உள்ளது. ஆளுநர் மாளிகை குறித்து நாங்கள் குற்றம் சுமத்த முடியாது. அரசியலமைப்பில் அதற்கு இடமில்லை. புகாரில் உள்ள முரண்பாடுகள் குறித்தே நாங்கள் விளக்கமளிக்கிறோம் என்று தெரிவித்தார்.
ஆளுநருக்கு அளித்துவரும் பாதுகாப்பை குறைக்கவில்லை. 253 பேர் ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்கு பணிபுரிகின்றனர். ஆளுநர் வெளியூர் நிகழ்வுகளுக்கு செல்லும்போது தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.