பாம்பு என்கிற சொல் நம் காதில் விழுந்தாலே பயம் தொற்றிக்கொள்கிறது. காரணம் பாம்புகளின் நஞ்சு. ஆனால், உண்மையில் பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை. அறிவியல் புரிதல் வளர்ந்துவிட்ட இக் காலத்தில் பாம்புகளைக் கண்டவுடன் மனிதர்கள் கொல்வதும், நஞ்சுடைய பாம்பு களால் மனிதர்கள் கடிபட்டு உயிராபத்தை எதிர்கொள்வதும் முடிவுக்கு வந்தபாடில்லை.
வீட்டிற்குள் நுழையும் பாம்பை அடிப்பதாலோ அல்லது பிடித்து வேறொரு இடத்தில் விடுவதாலோ மீண்டும் வீட்டிற்குப் பாம்பு வராது என்பது நிச்சயமில்லை. எனவே, மனிதர்களின் வாழ் விடங்களுக்குள் பாம்புகள் வராமல் இருப்பதற்கான வழிவகையைக் கண்டடைவதோடு, அவற்றை எதிர் கொள்வதற்கான அணுகுமுறையை அறிவதும் அவசியம்.

பாம்புகள் நம் அருகில் வசித்தாலும் நம் நடமாட்டங்களை நன்கு உணர்ந்தே செயல்படு கின்றன. அதிகாலை, அந்திப்பொழுது, இரவுப் பொழுதுகளில் பாம்புகளின் நடமாட்டம் அதிக மாக இருக்கிறது. மழைக்காலத்தில் அவற்றின் வாழ்விடங்கள் நீரில் மூழ்குவதாலும், வெயில் காலத்தில் உணவிற்காகவும், வேறு சில இடையூறுகளிலிருந்து தப்பிக்கவுமே மனிதக் குடியிருப்புக்குள் அவை நுழைகின்றன.
இப்படி பட்ட நிலையில் தான் பாம்புகல் பற்றி புரிதல் இல்லாத நிலையில் அவைகளை நாம் எதிரிகளாகவே பார்க்கிறோம்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன். இவர் அந்த பகுதியில் நான்கு ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வருகிறார். இவர் சாகுபடி செய்யும் வயலில் எலி தொல்லை அதிகளவு இருந்து வந்துள்ளது. இதனால் பயிர்களை அதிகளவு சேதம் செய்து வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவரது வயலுக்கு அருகே 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்றை பார்த்துள்ளார். ஆனால் இவர் கடந்து சென்றும் அந்த பாம்பு இவரை ஒன்னும் செய்யாததால் அந்த பாம்பை அடிக்காமல் அப்படியே விட்டு விட்டார்.

இவர் வயலுக்கு வரும் போதெல்லாம் அந்த பாம்பு அந்த வயலிலேயே எலிகளைப் பிடித்து சென்றுள்ளது. விவசாயிகளின் தோழன் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த பாம்பு விளைநிலங்களுக்கு பாதுகாப்பாக இருந்ததுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வயலுக்கு செல்லும் வழியில் அந்த சாரை பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சோகமடைந்து அவர் தனது ஊரில் உள்ளவர்களுக்கு இறந்தை கூறி அந்த பாம்பை மனிதர்களை போல் பாடைகட்டி பன்னீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி பாடையில் தூக்கி சென்று அருகில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.