தன்னை ஏமாற்ற நினைத்த காதலனை பழிதீர்க்க ஆண்போல மாறுவேடமிட்டு , மணமேடையில் , ஆசிட் வீச முற்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தபோது, அவர் மீது ஆசிட் வீசியதாக 22 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் பன்புரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோட்டே அமபால் கிராமத்தில் மணமகன் தம்ருதர் பாகேல் (25), 19 வயது பெண்ணை திருமணம் செய்யவிருந்தபோது, அங்கு வந்த இளம்பெண் மணமகன் மீது ஆசிட் வீசினார். இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் மணமகன், மணமகள் மற்றும் திருமணத்தில் கலந்து கொண்ட 10 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். “நாங்கள் கிராமத்தில் நிறுவப்பட்ட சில சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஸ்கேன் செய்தோம். மணமகன் மற்றும் மணமகளின் பின்னணியை சரிபார்த்தோம்.
மாலை நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் குற்றம் சாட்டப் பட்டவரை பார்க்க முடியவில்லை என்றும், அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதாகவும் மக்கள் கூறினார்கள். விசாரணையில் மணமகனின் முன்னாள் காதலியான ஒரு பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது, அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார் அவர்மீது ஐபிசி பிரிவு 326 ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக” பஸ்தார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிவேதிதா பால் தெரிவித்தார்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த அதிர்ச்சிதரும் வாக்குமூலத்தில், தனக்கும் தம்ருதர் பாகேலுக்கும் கடந்த பல வருடங்களாக உறவு இருப்பதாகவும், தம்ருதர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்ற திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனால், தம்ருதரின் திருமணத்தைப் பற்றி அந்தப் பெண் அறிந்ததும், தாக்குதலைத் திட்டமிட்டு, அவர் வேலை செய்யும் மிளகாய்ப் பண்ணையில் இருந்து ஆசிட்டைத் திருடியுள்ளார்.
அதன்பின்னர் திருமண நிகழ்வுக்கு ஆண்போல மாறுவேடமிட்டு வந்து மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளார். அது மற்றவர்கள் மீதும் பட்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலனுக்காக ஒரு இளம்பெண்ணே களமிறங்கி ஆசிட் வீசிய சம்பவம் சத்தீஷ்கரில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.