தமிழகத்தில் இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 4) நிறைவடைகிறது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் உள்ள 1.5 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி தொடங்கியது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.49 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றி உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். என்பதால் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் tneaonline.org tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.