இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜி 20 கூட்டமைப்பில் இணைந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடுகள், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. நேற்று, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்திற்குச் சென்று ஆயுர்வேதம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்புக் குறித்து அறிந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, காணொலிப் பதிவின் மூலம் உரையாற்றிய மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆப்பிரிக்கத் தூதுக்குழுவை வரவேற்றார். இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளின் திறன், ஆப்பிரிக்க நாடுகளில் உலகளாவிய சுகாதார பாதுகாப்பின் நோக்கத்தை அடைய உதவும் என்று அவர் கூறினார்.
ஆயுர்வேதம் மற்றும் இந்தியாவின் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்புகளை அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பாரம்பரிய மருத்துவம் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார். உலக சுகாதார நிறுவனமும் அதன் திறனை அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பாரம்பரிய மருத்துவத்தை முக்கிய சுகாதார சேவையாக கொண்டு வரும்போது, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு சுகாதார சேவைகள் தொடர்பான இடைவெளிகள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஆப்பிரிக்க நாடுகளின் உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி 20 தலைவர்களின் பிரகடனம் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், சுகாதாரத்தில் ஆதார அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவத்தின் பங்கையும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, 2023 ஆகஸ்ட் 17-18 தேதிகளில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் முதல் உலகளாவிய உச்சிமாநாட்டில், பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. ஆபிரிக்க தூதுக்குழுவின் இந்தப் பயணம் அவற்றின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.