- மின்வேலி மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு அதிகரிப்பு
- வனவிலங்கு ஆர்வலர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2023 ம் ஆண்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பாக முடித்து வைத்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- நீதிபதி சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு
- தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செப் 12ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவு
நாடு முழுவதும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 800 யானைகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் ஓடிசா மற்றும் அசாம் மாநிலங்களிலும் மின்வேலிகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்ற ஆன்டே தமிழக அரசின் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதிஇன்றி மின் வேலிகள் அமைக்கப்படுவதால், பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் கடுமையான தண்டனையை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது தொடர்வதால் அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணை எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
யானைகள் மின்வேலியின் சிக்கி உயிரிழப்பதை தடுக்க கோரிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த 2023 ம் ஆண்டு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்தையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ச்சியாக மின்வேலியில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக நீதிபதிகள் சதிஷ்குமார்,பரதசக்ரவர்த்தி அமர்வின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்,மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு மற்றும் அதை தடுப்பது குறித்து கடந்த 2023 ம் ஆண்டு அரசு எடுத்த நடவடிக்கை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ச்சியாக யானைகள் மின்வேலி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதால் அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு செப் 12 ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.