தலையங்கம்…..
நாட்டில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை எல்லா பிரச்சினைகளுக்குள்ளும் ஒரு அரசியல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் தமிழ்நாடு மட்டும் என்ன விதிவிலக்கா? எல்லா நாடுகளிலும் அரசியலுக்குள்ளும் ஒரு அரசியல் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளும் ஒரு அரசியல் அல்ல, பல அரசியல்கள் இருப்பதை நம்மால் அறிய முடியும்.
குறிப்பாக தற்போது பேசு பொருளாக இருந்து வரும் அரசியல் அஇஅதிமுக அரசியல். கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் திமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுக என்கிற ஒரு இயக்கத்தை கட்டினார். அது ஒரு சாதாரண இயக்கம் அல்ல, எம்ஜிஆர் உயிரோடு இருக்கின்ற வரை தமிழகத்தின் முதல்வராக அவரை தவிர வேறு யாரும் வர முடியவில்லை என்பதற்கு உதாரணம் அஇஅதிமுக. எம்ஜிஆருக்கு பிறகு வந்த ஜெயலலிதா அதிமுக தொண்டர்களால் கூட அசைக்க முடியாத சக்தியாக அந்த இயக்கத்தில் வலம் வந்தவர். ஜெயலலிதாவை பொறுத்தவரை அதிமுகவிற்கு மட்டுமல்லாமல் இந்திய அரசியலில் அவர் ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
அவரின் மறைவுக்குப் பிறகு பல இடர்கள் நேர்ந்ததை நாம் அறிவோம். அவற்றையெல்லாம் ஒரு வகையில் கடந்து அந்த அமைப்பிற்கு பொதுச் செயலாளராகி இருக்கிறார் எடப்பாடி. கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆகட்டும், நிர்வாகிகள் மத்தியில ஆகட்டும், சட்டப் போராட்டம் ஆகட்டும் எல்லாவற்றையும் ஒருவழியாக கடந்து வந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
உண்மையிலே ஒரு அர்ப்பணிப்பும், நம்பிக்கையும் உள்ள அதிமுக தொண்டர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதை யாரும் மறுக்க முடியாது.
ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா என எல்லோரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதுதான் உண்மையும் கூட இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு எவ்வளவோ பணிகள் இருக்கும் நிலையில் இந்த பணியில் கட்சி விதிகளுக்கு உட்பட்டு ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தாலும் கூட மீண்டும், மீண்டும் அவற்றுக்குள் ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டே சிலர் இருக்கிறார்கள்.
அதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக தேர்தல் ஆணையம் என்ன விதிகளை வைத்திருக்கிறது? அந்த அடிப்படையில் அது ஒரு முடிவு எடுக்கட்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் தலைமையில் உயர்நிலைக்குழு இந்த பிரச்சனையை விசாரிக்கிறது. கட்சிகளின் விதி, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதில் எல்லாம் ஏதாவது முறைகேடு செய்திருக்கிறார்களா? விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரித்து தேர்தல் ஆணையம் ஒரு முடிவெடுக்கும்.
ஆனாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி ஓரளவுக்கு கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறார் என தெரிகிறது. அந்த வகையில் தலைமை தேர்தல் ஆணையர் விசாரணை முடிவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டது செல்லும் என்கிற தீர்ப்பு தான் சரியாக இருக்கும்.
ஓபிஎஸ் தரப்பு யாரை திருப்தி படுத்த தொடர்ந்து செயல்படுகிறது என்பது விசாரணை முடிவில் தெரியும் பொறுத்திருப்போம்.
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்
super