3 மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உணவுக்கு வழியின்றி தவித்த மூதாட்டி.

2 Min Read
மூதாட்டி சுருளியம்மாள்

கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம்  முறையிட்ட சில நிமிடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட உதவித்தொகையை ரொக்கமாக வழங்கிய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டுகள்.

- Advertisement -
Ad imageAd image

மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சுருளியம்மாள் என்ற 85 வயது மூதாட்டி தனது கணவர் ரெங்கசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் யாரும் இல்லாத காரணத்தால் அதே பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மூதாட்டி சுருளியம்மாள் முதியோர் உதவித்தொகை பெற்றுவந்துள்ளார். அதன் மூலமாக வாடகை மற்றும் உணவு மற்றும் மருத்துவதேவைகளை செய்து வாழ்க்கையை நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக மூதாட்டி சுருளியம்மாளுக்கு வந்துகொண்டிருந்த உதவித்தொகை வராமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் அலுவலகம்

இது குறித்து யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்துவந்த முதாட்டி தபால் ஊழியரிடம் கேட்டநிலையில் பணம் வரவில்லை என கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்து மூதாட்டி தனது கம்மலை 3 ஆயிரம்ரூபாய்க்கு அடகுவைத்து அதன் மூலம் வந்த பணம் முழுவதும் செலவாகிய நிலையில் உணவிற்கு வழியின்றி தவித்துவந்துள்ளார்.

இதனையடுத்து தனது முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடக்க கூட முடியாத சூழலில் கை ஊன்றுகோல் கூட இல்லாமல் ப்ளாஸ்டிக் தண்ணீர் பைப் ஒன்றை ஊன்றியபடி கண்ணீருடன் வருகை தந்தார்.

இதனையடுத்து நடக்கமுடியாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்த மூதாட்டி சுருளியம்மாள் செய்தியாளர்களிடம் தனது நிலை குறித்து கண்ணீர்விட்டு அழுதபடி கூறினார். இதனையடுத்து சமூக ஆர்வலரான நாகேஸ்வரன் என்பவர்  மூதாட்டியின் கோரிக்கை குறித்து மனுவை எழுதிய பின்னர் செய்தியாளர்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அனி்ஸ்சேகரிடம் அழைத்துசென்று மூதாட்டியின் நிலை குறித்து எடுத்துரைத்த நிலையில்  உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

மூதாட்டி சுருளியம்மாள்

அப்போது அதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள் மூதாட்டியின் உதவித்தொகை தொடர்பாக தொடர்பு எண் முறையாக இல்லாத காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறினர். இதனையடுத்து உடனடியாக மூதாட்டிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மாத உதவித்தொகையையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக மூதாட்டி சுருளியம்மாளிடம் 3 மாத உதவித்தொகையையும் மொத்தமாக ரொக்கமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனால் மூதாட்டி மிக்க மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

செல்போன் எண் இல்லை என்பதற்காக மூதாட்டிக்கு நிறுத்திவைக்கப்பட்ட 3 மாத உதவித்தொகையை உடனடியாக கையில் கொடுத்து நடவடிக்கை எடுத்ததோடு இனியும் மாதம்தோறும் எந்தவொரு தடையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மூதாட்டியை பத்திரமாக வீட்டிற்கு ஆட்டோ மூலமாக அழைத்து சென்று விட வேண்டும் எனவும் உத்தவிட்ட நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Share This Article
Leave a review