- ஒரத்தநாட்டில் எடப்பாடி. பழனிச்சரமி வாக்கு சேகரித்த போது அவர் மீது காலணி வீசிய மா.சேகர் இன்று எடப்பாடியை புகழ்ந்து தள்ளுகிறார். அதிமுகவை எதிர்த்து நின்று போட்டியிட்ட மா.சேகர் வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் பற்றி பேச அருகதை கிடையாது என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
தஞ்சாவூரில் இன்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
திமுகவை வீழ்த்துவதற்காக மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கினார். அவருக்குப் பிறகு அதிமுகவை ஜெயலலிதா கட்டிக் காத்தார். தற்போது அதிமுக பிளவுப்பட்டு இருக்கிறது. மீண்டும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் அனைத்து உண்மையான தொண்டர்களின் விருப்பமாகும். ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்று பார்ப்பதை விட ஒற்றை கருத்துள்ள தலைமை தான் முக்கியம்.
உண்மையான சோழமண்டல தளபதி வைத்திலிங்கம் தான். அவரைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை மா.சேகர் உள்ளிட்டவர்கள் பேசி வருவதை கைவிட வேண்டும் . மா. சேகர் முதலில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவிற்கு வந்து அதன் பிறகு அமமுக விற்கு சென்றார். மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஒரத்தநாட்டிற்கு வாக்கு சேகரிக்க வந்தபோது அவர் மீது சிலர் காலணியை வீசினர். அவர்களை வீச சொன்னதே மா. சேகர் தான். மேலும் ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவராக அவர் இருக்கும் சூழ்நிலையில் அமமுக வில் இருந்து தான் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது அதிமுகவை எதிர்த்து நின்று வென்றார். இப்படி பல்வேறு துரோகம் செய்த அவர் வைத்திலிங்கத்தை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

தமிழகத்தில் ஒரத்தநாடு தொகுதியை முன்மாதிரியாக மாற்றி காட்டியவர் வைத்திலிங்கம். தஞ்சை மாவட்டத்தில் வேளாண் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர் அவர்தான். மற்ற தொகுதி மக்களே பொறாமைப்படும் அளவிற்கு ஒரத்தநாடு தொகுதியை மாற்றி காட்டியுள்ளார்.
தமிழகத்தில் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதே அனைத்து உண்மையாக தொண்டர்களின் விருப்பமாகும். அதற்கு அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று அனைத்து தொண்டர்களும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ஒன்றிணைந்த பிறகு யார் தலைமையே என்றாலும் ஏற்றுக்கொள்ள தயார். ஒற்றை கருத்து தான் முக்கியம். எனவே தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.