அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசிய ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர் மாவட்டத்தில், சிறுதானிய விளைச்சலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு உடல்நலத்தை பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் திருச்சி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியை சட்டமன்ற உறுப்பினர் திரு கண்ணன் இன்று துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசின் நலத்திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்திருப்பது அவசியம் என்றும் அதன் வாயிலாக இந்தத் திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் திரு ஜெ காமராஜ், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை எனும் லைஃப் திட்டம் சூழலியல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதன் மூலமாக பூமிப்பந்தின் ஆயுட்காலத்தை நாம் அதிகரிக்க இயலும் என்று எடுத்துரைத்தார். சிறுதானியங்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளாக இருந்தது என்றும், இதன் காரணமாக நமது முன்னோர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கட்டிக்காக்க முடிந்தது என்றும் இன்றைய தலைமுறையினரின் துரித உணவுப் பழக்கங்கள் காரணமாக சிறு வயதிலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சிகள் வாயிலாக, பல்வேறு தரப்பட்ட மக்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்கள் குறித்து மாணவ மாணவியர் அறிந்து கொள்வதோடு இது குறித்த தகவல்களை தங்கள் உற்றார் உறவினருக்கும், ஏனைய நண்பர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சிகள், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நடத்தப்படுகின்றன என்று கூறிய அவர், யோகா, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை, சர்வதேச சிறுதானிய ஆண்டு, மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அந்தந்த மாதங்களில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய நாட்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இந்தக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன என்றும் இதன் மூலமாக அறியப்பெறும் தகவல்களை மாணவ மாணவியர், பொதுமக்கள் அறியும் வகையில், அவர்களிடையே பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மத்திய மக்கள் தொடர்பக திருச்சி அலுவலக களவிளம்பர அலுவலர் தேவி பத்மநாபன், தனது வரவேற்புரையில், 2021-ஆம் ஆண்டு இந்திய அரசு விடுத்த வேண்டுகோளையடுத்து, ஐக்கிய நாடுகள் சபை இந்த 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது என்றார். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்ற அடிப்படையில், தண்ணீர் சேமிப்பு, எரிபொருள் சேமிப்பு, நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் தமது உரையில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அரியலூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திரு மோகன் கபசுர குடிநீ்ர் போன்ற சித்த மருத்துவ மருந்துகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததுடன், இத்தகைய சித்த மருத்துவ முறைகள் கொரோனா பெருந்தொற்றின் போது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தியது குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ ராணி, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் திரு ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். புகைப்பட கண்காட்சி அரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சமூக நலன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், சித்த மருத்துவ அமைப்பு, காசநோய் ஒழிப்பு, அஞ்சல்துறை ஆகியவற்றின் அரங்கங்கள் அமைக்கப்பட்டு கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வையும், உதவிகளையும் மேற்கொண்டன. சர்வதேச சிறுதானிய ஆண்டுக் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இசை நாடகப் பிரிவின் கலைநிகழ்ச்சிகளும் விமரிசையாக நடத்தப்பட்டன.
மத்திய மக்கள் தொடர்பக தர்மபுரி அலுவலக களவிளம்பர உதவி அலுவலர் தியாகராஜன் நன்றியுரை ஆற்றினார். தஞ்சாவூர் அலுவலக களவிளம்பர உதவி அலுவலர் திரு ரவீந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.