கோவையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மழை நீருடன் சாயப்பட்டறை கழிவுகளும் கலந்ததால் ஆத்துப்பாலம் சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் நுரை பெருக்கெடுத்து காணப்படுகின்றது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் நன்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகளில் மழை நீருடன் சாயப்பட்டறை கழிவுகளும் கலந்ததால் ஆத்துப்பாலம் சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் நுரை பெருக்கெடுத்து ஓடுகிறது. கோவையில் தொடர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அந்தத் தண்ணீரை சேமிப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக, கோவையில் பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து, நுரை பறந்த அவலத்தைப் பார்க்க முடிந்தது.இதன் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் நுரை காணப்படுகிறது. செல்வபுரம், புட்டுவிக்கி, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ப்ளீச்சிங் ஆலைகள் இயங்கி வருகின்றன. பொதுவாகவே, அந்த ஆலைகள் நொய்யல் வழித்தடத்தில் தான் கழிவுகளை விடுவார்கள். அது அப்படியே தேங்கி நிற்கும். இந்நிலையில், மழைநீர் வெள்ளம் போல அடித்துவர அதனுடன் கழிவுநீர் கலந்து நுரைகளாக பறக்கின்றன. இதனால், அந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.
கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை நீருடன சாயப்பட்டறை கழிவுகளும் மழை நீருடன் கலந்துள்ளது. இதன் காரணமாக ஆத்துப்பாலம் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் தண்ணீர் செல்லும் பாதையில் நுரை பெருக்கெடுத்துள்ளது. பல மீட்டர் தொலைவிற்கு வெண்ணிறத்தில் நுரை தேங்கி இருப்பதை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். இதனிடையே இன்று காலை 8 மணி வரையிலான மழை அளவினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கோவை பீளமேடு பகுதிநில் 6.1 சென்டிமீட்டர் மழையும், கோவை தெற்கு பகுதியில் 5.6 செ.மீ, தொண்டாமுத்தூர் பகுதியில் 5.9 செ.மீ, வேளாண் பல்கலை பகுதியில் 5.2 செ.மீ மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்திலும் வானம் மேக மூட்டத்துடன், குளிர்ந்த காலநிலையுடன் காணப்படுகின்றது. மறுபக்கம் அந்தக் கழிவு நுரை பறப்பதால், அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. நொய்யல், தன் பயணத்தைத் தொடங்கிய கொஞ்ச தூரத்திலேயே பிரச்னையும் தொடங்கி விடுகிறது. காலம் காலமாக தொடரும் இந்தப் பிரச்னைக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் புகார் சொல்லப்படுகிறது.