போடிநாயக்கனூர் குரங்கணி அருகே தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள சென்ட்ரல் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால் கொட்டும் மழையில் வயதான மலைவாழ் பழங்குடி பெண்மணியை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூலி கட்டி தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலநிலை.புதர்களை அப்புறப்படுத்தி சேறும் சகதியும் நிறைந்த மலைப்பாதையில் நோயாளி உயிரைக் காப்பாற்ற மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் சென்ற கிராம மக்கள். பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தர கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் போக்குவரத்து வசதியின்றி வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள்.அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் ஐந்து கிலோ மீட்டர் கால்நடையாகவே மலைப்பகுதியில் நடந்து வந்து நோயாளிகள் உயிரை காப்பாற்றவேண்டிய அவலநிலை.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குரங்கணி மலைவாழ் கிராமம், இங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சென்ட்ரல் ஸ்டேஷன் குக்கிராமம். இதற்கு அருகாமையிலேயே முட்டம், முதுவாக்குடி டாப் ஸ்டேஷன் போன்ற பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் முழுவதும் தேயிலை ஏலக்காய் மிளகு, காபி இலவம் பஞ்சு போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் போடிநாயக்கனூரில் இருந்து குரங்கணி வரை மட்டுமே தார் சாலை உள்ள நிலையில் குரங்கணியில் இருந்து இப்பகுதிகளுக்கு சாலை வசதி இல்லை. இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலைவாழ் மக்களின் மக்களின் நீண்ட கால கோரிக்கை தற்போது வரை கனவாகவே இருந்து வருகிறது.
இப்பகுதிகளின் சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். சென்ட்ரல் ஸ்டேஷன் பகுதியில் மட்டும் சுமார் நூறு குடும்பத்தினருக்கு மேல் மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்து விவசாயக் கூலியாக இவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.தேர்தல் சமயத்தில் கூட இப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டியில் மற்றும் வாக்குச்சாவடிக்கான உபகரணங்கள் குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலமாகவே இன்று வரை கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும் இப்பதிகளுக்கு செல்போன் மற்றும் தொலைபேசி வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை.முன்பு டாப் ஸ்டேஷன் வரை ஜீப் போக்குவரத்து இருந்து வந்த நிலையில் தற்போது வனத்துறை கட்டுப்பாடுகள் காரணமாக ஜீப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் டாப் ஸ்டேஷன் செல்லும் சாலைகள் முழுவதும் புதர் மண்டி ஒத்தையடி பாதை போல் காட்சி அளித்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்காக சுமார் ஐந்தரை கிலோமீட்டர் கால்நடையாகவோ அல்லது டோலி மூலமாகவோ குரங்கணி வரை கொண்டுவரப்பட்டு அங்கிருந்து போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றனர்.

சென்ட்ரல் ஸ்டேஷனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் டேவிட். இவரது மனைவி வேளாங்கண்ணி வயது சுமார் 60. கடந்த ஒரு வார காலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறாத நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 05.01.24 உடல்நிலை மிகவும் பாதித்த நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முறையான தகவல் தொடர்பு வசதி மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கொட்டும் மழையில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து குரங்கணி வரை சுமார் 5.30 கிலோ மீட்டர் புதர் மண்டிய ஒத்தையடி மலைப்பாதையில் வேளாங்கண்ணியை ஒரு போர்வையில் கட்டி டோலி கட்டி தூக்கிவரப்பட்டார். மழை காரணமாக சேரும் சகதியும் நிறைந்து புதர் மண்டிய வழுக்கும் மலை சாலையில் புதர்கள் அப்புறப்படுத்திக் கொண்டே மிகுந்த சிரமத்துடன் சுமார் பத்திற்கு மேற்பட்ட நபர்கள் வேளாங்கண்ணியை தூலி மூலம் கட்டி வந்து குரங்கணி வரை கொண்டு வந்தனர்.அங்கிருந்து உடனடியாக போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட வேளாங்கண்ணிக்கு சர்க்கரை நோய் அதிகமாகி உள்ளது கண்டறியப்பட்டு உன் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி வேண்டி போராடிவரும் இப்பகுதி மக்களுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படாததால் இப்பகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள் மிகுந்த பரிதவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை சாலையை ஆய்வு செய்து சாலை வசதிக்கான திட்டங்களை கொண்டு வந்து உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தருவதாகவும் செல்போன் டவர்கள் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்து சென்றனர். ஆனால் இன்று வரை எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இப்பகுதிவாழ் மலைவாழ் மக்கள் போக்குவரத்து மற்றும் முறையான தகவல் தொடர்பு வசதியின்றி பரிதவித்து வருகின்றனர்.
சாதாரண நாட்களில், இப்பகுதி வாழ் மக்கள் டாப் ஸ்டேஷனில் இருந்து கேரளா மாநிலம் மூனாறு வழியே வந்து செல்லும் நிலை உள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கேரளா மாநிலத்தையே போக்குவரத்திற்காக பயன்படுத்தி வரும் நிலையில் விரைவில் இப்பகுதி கேரள மாநிலத்துடன் இணைந்து விடும் அபாயம் உள்ளது என்று இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு முறையான சாலை வசதி மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.