திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்ததோடு நெல்மணிகளும் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், அருகே கல்லுப்பட்டி, ராஜகாபட்டி, சந்தப்பட்டி, பண்ணைப்பட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்பொழுது இந்த விவசாய தோட்டங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையினால் நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்ததோடு, நெல் மணிகளும் உதிர்ந்து போனதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு சம்பந்தப்பட்ட தோட்டங்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.