பைக் ஓட்டுவதென்றால் இளைஞர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அதுவும் தன்னை யாராவது பார்க்கிறார்கள் என்றால் சொல்லவா வேண்டும்.அப்படிதான் சூலூர் அருகே சாலையில் பேருந்துக்கு இடையூறாக பைக்கில் 8 போட்டு காட்டிய போதை ஆசாமி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரை போலீசார் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் கடந்த வாரம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துக்கு முன்பாக போதை ஆசாமி ஒருவர், குறுக்கும் மறுக்குமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஒட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.அது மட்டுமா அவர் சாலையில் எட்டு போட்டு காட்டிய விதம் அப்படி இருந்தது.இதனை இப்படியே விடலாமா என நினைத்த பேருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது.பலரும் இந்த வீடியொவை பார்த்து ரசித்தனர்.

மேலும் மது போதையில் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய போதை ஆசாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் ஓட்டிய போதை ஆசாமி தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த சூலூர் போலீசார், திருச்சி சாலையில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் போக்குவரத்துக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய நபர் ஒண்டிபுதூர் பகுதியில் வசிக்கும் ராஜகோபாலன் என்பவர் மகன் வினோத் மணிகண்டன் என்பதும், இருகூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
வாகனங்கள் ஓட்டுவதே இப்போதெல்லாம் ஆபத்தானது அதுவும் ஆபத்தான நிலையில் வாகனம் ஒட்டுவது எப்படி இருக்கும்.இந்த மது போதை ஆசாமி கைது போல தான் இருக்கும்.