காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அந்த குடிநீர் தொட்டி நேற்று இடித்து அகற்றப்பட்டது.
உத்திரமேரூர் ஒன்றியம் திருவனந்தவார் கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 96 மாணவ மாணவியர் பயில்கின்றனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு பள்ளி சமையலர் கண்ணகி பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்து உணவு சமைத்தார். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. குடிநீர் தொட்டி தண்ணீரில் காய்கறிகளை சுத்தம் செய்த போதும், அதிக வாடை வீசியதால் சந்தேகம் அடைந்தார்.

அப்போது தண்ணீர் தொட்டியை சோதித்த போது முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் ஏதோ மிதப்பதை சமையலர் மற்றும் சத்துணவு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட எஸ்,பி சுதாகரன் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, உத்திரமேரூர் தி.மு.க எம்.எல்.ஏ சுந்தர் உள்ளிட்ட அங்கு வந்தனர்.
பள்ளியின் குடிநீர் தொட்டி மற்றும் வளாகத்தை சுற்றிலும் ஆய்வு செய்தனர். பள்ளியின் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருவந்தவார் அரசு நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக பொய்யான தகவல் பரவியதாகவும். அழுகிய முட்டையின் மஞ்சள் கருவை அவ்வாறு சிலர் கருதி இருப்பதாகவும், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி விளக்கம் அளித்தார்.

மனித மலம் கலந்ததாக கூறப்பட்ட தண்ணீரை, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேற்று முன்தினம் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி மனித மலம் கலந்ததாக கூறப்பட்ட அப்பள்ளியின் குடிநீர் தொட்டி நேற்று இடித்து அகற்றப்பட்டது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், நிர்மலா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நேற்று பள்ளியில் சுகாதாரம் குறித்தான ஆய்வு மேற்கொண்டு, துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொண்டனர்.
பள்ளியில் புதிதாக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைத்து, அப்பகுதி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் மூலம் ஊராட்சி சார்பில் நேற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டது. விரைவில் சிமெண்ட்டால் ஆன, புதிய குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்கப்படும் என உத்திரமேரூர் பி.டி.ஒ. லோகநாதன் தெரிவித்தார்.