நீட்தேர்வு ரத்து செய்வதாக கூறி மாணவர்களின் உயிரைப் பறித்து தான், திமுகவின் சாதனை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..!

4 Min Read
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

சேலத்தில் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,

- Advertisement -
Ad imageAd image

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக தேர்தல் முகவர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது தமிழக முதல்வர் பல்வேறு விமர்சனம் என்னை பற்றி செய்துள்ளார். அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் என்னைப் பற்றி மட்டுமே அதிகம் பேசியுள்ளார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பொய்யர் பழனிச்சாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் எந்தவித பொய் செய்தி வெளியிட்டதே இல்லை. என்னுடைய அறிக்கையிலும், ஊடகம் வாயிலாக பேட்டியளிக்கும் போதும் பொய்யான செய்தியை எப்பொழுதும் கொடுத்ததில்லை.
வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் என்னைப்பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார் இது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

தமிழகத்தில் இரண்டரை ஆண்டு திராவிடமாடல் ஆட்சி என்று கூறி வரும் நிலையில் மக்கள் கொதித்துப் போய் வெறுத்துள்ளனர்.அதை தாங்கிக் கொள்ளமுடியாமல் அந்த பயத்தில் என்னைப்பற்றி விமர்சனம் செய்துள்ளார்.பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு அதிமுக பற்றி பல்வேறு விமர்சனங்களை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.பாஜக கூட்டணி இருந்து அதிமுக விலகிவிட்டது.விலகிவிட்ட காரணத்தால் திமுக தலைவர் பயந்து நடுங்கி கொண்டுள்ளார். அவரது பேச்சும், அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.

இதுவரை சிறுபான்மை மக்களை ஏமாற்றி வந்தார்கள்.தமிழகத்தில் சிறுபான்மைக்கு திமுகவும், கூட்டணி கட்சிகளும் மக்களுக்கு நன்மை செய்வது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வந்தனர். இப்பொழுது கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பிறகு சிறுபான்மை மக்கள் அதிமுகவுடன் நடைபெறும் சந்திப்பை திமுக தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல், வெறுப்புபேச்சு முதல்வரிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு முடிக்கின்ற தருவாயில் உள்ள திட்டங்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

திமுக 2 அரை ஆண்டுகால ஆட்சிகாலத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து வருகிறார். திமுக அரசு அத்திக்கடவு,அவினாசி திட்டம் கிடப்பில் போட்டுவிட்டனர். அது நிறைவற்றப்பட்டிருந்தால் பல்வேறு ஏரிகள் நிரம்பி வேளாண் மக்கள் பயனடைந்து இருப்பார்கள்.அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காகவே திமுக அரசு பல்வேறு திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் டீசல் விலை குறையாததால் அண்டைமாநிலமான கர்நாடகவிற்கு சென்று லாரிகளுக்கு டீசல் நிரப்பி விட்டு தமிழகத்திற்கு வருகிறது.

இதனால் வரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இப்படிப்பட்ட நிகழ்வு தான் திமுக ஆட்சியில் உள்ளது. மேலும் வீட்டுவரி, நிறுவனங்கள் வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை திமுகஅரசு உயர்த்தி உள்ளது இருப்பினும் பற்றாக்குறை தான் என்றும் குற்றம்சாட்டினார். திமுகஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலத்தில் 2 அரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்தேர்வு ரத்து செய்யும் கையெழுத்து தான் என்று கூறியிருந்தார்.

சட்டமன்றத்தில் அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் போன்று தான், திமுகவும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.நீட்தேர்வுக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். இது மாநில பிரச்சினை அல்ல;தேசியளவில் உள்ள பிரச்சினை என்றார். தற்போது இந்திய கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய தலைவர்கள் யாராவது ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியை அளிக்க சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேள்வி எழுப்பினார்.

நீட்தேர்வை கொண்டு வந்ததும், எதிர்ப்பதும் திமுக தான் என்பதால் வேடிக்கையாக உள்ளது. 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியதாக கூறும் தமிழக அரசு யாரிடம் கொடுக்கும் என்றும் கேள்வி எழுப்பினர். நீட்தேர்வு ரத்து செய்வதாக கூறி, பல்வேறு மாணவர்களின் உயிரைப் பறித்து தான் திமுகவின் சாதனையாக உள்ளது. மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் திமுகவின் தவறான அணுகுமுறை தான்; மீண்டும் மீண்டும் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களை ஏமாற்ற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக ஒருநாளாவது அவையை ஒத்திவைக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

கையெழுத்துஇயக்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள், மக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு திமுகவிடம் பதில் இல்லை என்றும் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு திமுக முட்டையை தான் பரிசாக கொடுப்பார்கள் என்றும் கூறினார். டெல்டா மாவட்ட பகுதிகளில் மீத்தேன் திட்டம் கொண்டு வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. திமுக திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக தடுத்து நிறுத்தியது. ஆளுநரின் கருத்திற்கு அறிஞர்களை பார்த்து கேட்டால்தான் பதில் கிடைக்கும் தவறான பதில் நான் கொடுத்து விடக்கூடாது எனக்கு தெரியவில்லை.

அதிமுக தலைமையில் சிறப்பான வலுவான கூட்டணி அமையும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் இரண்டிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்தார். திமுகவிற்கும்,கொள்கைக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆட்சி அதிகாரம் மட்டும்தான் வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் சம்பாதித்த பணத்தை காக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை என்றும், திமுக கட்சியால் நாட்டு மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனவும் விமர்சனம் செய்தார். மேலும் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி என்று தமிழக முதல்வர் பேசி வருகிறார். இந்திய கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது எதிர்காலத்தில் தான் தெரியும் என்றும் கூறினார்.

Share This Article
Leave a review