செந்தில் பாலாஜி
‘நானும் அரசியலில் இருக்கிறேன்’ என்று காட்டிக்கொள்ள உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி , எனக் கிண்டலாக ட்விட்டரில் போஸ்ட் போட்டுள்ளார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி .
டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னதாகவே தமிழ் நாடு வாணிபக்கழகம் சார்பில் எச்சரித்து செய்தி வெளியிடப்பட்ட பிறகும் “நானும் உள்ளேன் அய்யா “என்ற கணக்கிற்குத் தவறான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தமிழ் நாடு டாஸ்மாக் நிறுவனத்துக்குக்கு சொந்தமான வணிக வளாக சில்லறை விற்பனை கடை (டாஸ்மாக் மால் ஷாப் ) ஒன்று இயங்கி வருகிறது . இதில் கடந்த வெள்ளிக்கிழமை தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் நிறுவி உள்ளது.

இது குறித்து அன்றைய தினமே தமிழ் ‘நாடு வாணிப கழகம்’ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் “சில்லறை விற்பனைக் கடைகளில் மது பாட்டல்களில் விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களைத் தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.

இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.
தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம், வணிக வளாக சில்லறை விற்பனை கடைகளுக்கு (Mall Shops) உள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் செய்யப்படும் அனைத்து விற்பனைகளும் கடைப் பணியாளர்களாகிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முன்னிலையிலேயே நடைபெறும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப் பணியாளர்களின் முன்னிலையில் கடைகளின் உள்ளேயே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்குக் குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும் இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை , ‘‘21 வயது நிரம்பியவர்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், தானியங்கி மது விற்பனை எந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நவீனமாகி வரும் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறைகளில் கூட எந்த ஒரு நவீன திட்டத்தைக் கொண்டுவராத இந்த விடியா திமுக அரசு, மது விற்பனைக்கு நவீன திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது’’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார் .
இதற்கு பதிலளிக்கும் வகையாக செந்தில் பாலாஜி ,”கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் ‘டாஸ்மாக் மால் ஷாப்’களில் தான் தானியங்கி நிறுவப்பட்டிருக்கிறதெனத் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் வெள்ளிக்கிழமையே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” எனக் கிண்டலாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் .