தி.மு.க. முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியீட்டு , இவை , அனைத்தும் ஊழல் பணத்தில் சேர்த்த சொத்து தான் என்று அறிவித்தார் .
இந்த நிலையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த குற்றசாட்டுகள் எதுவும் உண்மையில்லை என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களிடம் மறுப்புத் தெரிவித்துளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி நகைச்சுவை பட்டிமன்றத்தை நடத்தியுள்ளார் என்றும் விமர்சித்தார் .

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதி.
அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார். அவர் குற்றசாட்டு வைத்துள்ள 12 நபர்களும் அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை காட்டிலும், நீதிமன்றத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தான் அதிகமாக இருக்கும்.
ரபேல் வாட்ச் பில்லை காட்டுவேன் என்று சொன்னார். பில்லை காண்பித்தாரா? சீட்டை மட்டும் காண்பித்துள்ளார். பில்லை காண்பிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் மீது இவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அவர் எத்தனை வருடம் தொழிற்சாலை நடத்துகிறார். இதைவிட வேடிக்கை என்னவென்றால், இதன்மேல் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை, அமலாக்க துறை உள்ளது.

அந்த துறைகள் எல்லாம் பிரதமர் மோடி கையில் உள்ளது. பதவியை பறித்து விடுவார்கள் என்று மோடியையும், நிர்மலா சீதாராமனையும் விமர்சனம் செய்கிறாரா? என்று தெரியவில்லை.
தி.மு.க. என்பது திறந்த புத்தகம். எதை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட அண்ணாமலை பெரிய அறிவுலக மேதை இல்லை. ஆளுமை திறன் மிக்கவரும் கிடையாது. தி.மு.க.வுக்கு ரூ.1,408.94 கோடி சொத்து இருக்கிறது என்கிறார். அதன் பத்திரத்தை இன்றையில் இருந்து 15 நாட்களுக்குள் எங்களிடம் தர வேண்டும். தி.மு.க. ரூ.3,418 கோடியில் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறது என்கிறார். அந்த பள்ளிக்கூடங்கள் எந்த ஊரில் இருக்கிறது என்பதை பெயர் பட்டியலோடு வெளியிட்டு அதற்குரிய ஆதாரத்தை எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். அடுத்து தி.மு.க.வின் கல்லூரி, பல்கலைக்கழகம் நடத்துவதாக சொல்லியிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை சொல்ல வேண்டும்.
ஆருத்ரா ஊழலில் ரூ.2 ஆயிரம் கோடியில் பல கோடி ரூபாயை அண்ணாமலை நேரடியாக பெற்று இருக்கிறார். இதுதொடர்பாக பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட சொல்லி, கமலாலயத்தில் போராட்டம் நடத்தினார்கள். அகில இந்திய அளவிலும், மாநில அளிவிலும் இவர்கள் மீது இருக்கக்கூடிய குற்றச்சாட்டை திசை திருப்ப இன்றைக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
நான் அண்ணாமலைக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். தி.மு.க.வை பொறுத்தவரை எங்கள் மடியில் கனம் இல்லை. வழியிலேயும் பயம் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை அண்ணாமலை தலைவராக இருந்தால் தான், எங்களுக்கு வசதியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதாக இருக்கும். தி.மு.க.வினரை பொறுத்தவரை எதற்கும் பயந்தவர்கள் அல்ல. மக்களுக்காக பாடுபடுபவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.