50 வாக்குறுதிகளைக் கூட இதுவரை திமுக நிறைவேற்றவில்லை: ராமதாஸ்

0
20
டாக்டர் ராமதாஸ்

வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வரை விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்டமாக தமிழ்நாடு & புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19&ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கு இன்னும் இரு நாட்கள் மட்டும் எஞ்சி இருக்கும் நிலையில், இதுவரை இருந்ததை விட இன்னும் விழிப்புடனும், துடிப்புடனும் நீ களமாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவே உங்களுக்கு இந்த மடலை நான் வரைகிறேன்.மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே ஜல்லிக்கட்டு காளைகளாய் துள்ளிக் குதித்து தேர்தல் களத்திற்கு ஓடியவர்கள் பாட்டாளி சொந்தங்கள் தான். அன்று தொடங்கி இன்று வரை பாட்டாளி இளஞ்சிங்கங்களும், பாட்டாளி சொந்தங்களும் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெப்பநிலை 106 டிகிரியைக் கடந்து சுட்டெரிக்கிறது. வீட்டிற்குள் கூட இருக்க முடியாத வெயிலில் பாட்டாளிகள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

வெளியில் சென்றாலே வெந்நீரில் குளித்தது போன்று உடல் நனைகிறது; உடல் உறுப்புகள் அனைத்தும் சுடுகின்றன. வாக்குகளைக் கேட்பதற்காக நடந்து நடந்து பாட்டாளிகளின் கால்கள் வீங்கி விட்டன; பாதங்கள் பருத்து வலிக்கின்றன. ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தேர்தல் களத்தில் நீங்கள் பணியாற்றுவது எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. பாட்டாளி சொந்தங்களாகிய உன்னைப் பாராட்டவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை; நன்றி சொல்லவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை. தேர்தல் களத்தில் நீ அனுபவிக்கும் சிரமங்களை நான் அறிவேன். ஆனாலும், வேறு வழியில்லை. தமிழ்நாட்டைக் காப்பாற்ற இந்த சிரமங்களை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே கருத்தில் உள்ளனர். அதேநேரத்தில் தமிழ்நாட்டை ஆளும் கட்சிக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்; அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது.

2021 தேர்தலில் 500&க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்து மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் 50 வாக்குறுதிகளைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கிலோவுக்கு ரூ.12 வரை அரிசி விலை உயர்வு, மூன்றாண்டுகளில் 10 முறைக்கும் கூடுதலாக பால்விலை உயர்வு, தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மளிகைப் பொருட்கள் விலை உயர்வு என ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தின் செலவுகளை மாதத்திற்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை உயர்த்தியிருக்கிறது. இது தான் அந்தக் கட்சி அரசின் சாதனை. அதை நினைத்தாலே மக்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தமிழ்நாட்டில் திமுக ஒவ்வொருமுறை ஆட்சிக்கு வருவதற்கும் ஏணியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான். ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தாங்கிப் பிடிப்பவர்களும் அவர்கள் தான். ஆனால், அவர்களே திமுக அரசை இப்போது சபிக்கின்றனர்.திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அந்தக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மாறாக மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தால் பழைய ஓய்வூதியம் தருகிறோம் என்கிறது திமுக அரசு. மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான தேர்தலில் இந்த வாக்குறுதிகளை அளித்து, அரசு ஊழியர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று விட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் அவற்றை நிறைவேற்றுகிறோம் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டுள்ளனர்; தங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.

ராமதாஸ்

நிதி நெருக்கடியால் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்று திமுக அரசு கூறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே நிதி நெருக்கடி நிலவவில்லை. அனைத்து மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ஆனாலும், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், இமாலயப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும் போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. மாறாக, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே கூற வேண்டும். இந்த உண்மைகளை மக்களிடமும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் எடுத்துக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக நீங்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6.00 மணியுடன் ஓய்ந்து விடும். ஆனால், பாட்டாளி சொந்தங்களாகிய உங்களின் பணி ஓயாது. வாக்குப்பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிந்த பிறகும் ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் தங்களின் பண பலத்தையும், படைபலத்தையும் பயன்படுத்தி கள்ளவாக்குகளை கொத்துக் கொத்தாக போட முயலுவார்கள். நீதான் விழிப்புடன் செயல்பட்டு அவற்றைத் தடுக்க வேண்டும். அறுவடை செய்த நெல் கதிர்களை அடித்து, நெல்லைப் பிரித்து மூட்டைகளாகக் கட்டி வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வரை விவசாயிகள் எப்படி விழிப்புடன் பணியாற்றுவார்களோ, அதேபோல், நீயும் வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வரை விழிப்புடன் பணியாற்ற வேண்டும். உனது உழைப்பால் நாமும், நமது கூட்டணிக் கட்சிகளும் வெல்வது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here