தி.மு.க. தனது முழு பலத்தை பயன்படுத்தினாலும் செந்தில்பாலாஜியை காப்பாற்ற முடியாது-சி.வி.சண்முகம் எம்.பி.

5 Min Read
சிபி சண்முகம் கண்டன உரை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சியார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தனது முழு ஆட்சி பலத்தை பயன்படுத்தினாலும் செந்தில்பாலாஜியை  காப்பாற்ற முடியாது என்று விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.

- Advertisement -
Ad imageAd image

விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, ஊழல் முறைகேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவரை பதவி நீக்காத தி.மு.க. அரசை கண்டித்தும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர்.
செந்தில்பாலாஜி என்றால் மக்கள் யாருக்கும் தெரியாது. 10 ரூபாய் அமைச்சர் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். கோடிக்கணக்கில் கொள்ளையடித்து லஞ்ச ஊழல் வழக்கில் கைதான அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் உள்ளனர்.

ஏற்கனவே தி.மு.க. அரசின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் கடந்த 10 நாட்களாக முற்றிலும் செயல்படாமல் ஸ்தம்பித்துள்ளது. ஸ்டாலின் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி பயந்து போயுள்ளார். ஆனால் மு க ஸ்டாலின் திருவாரூரில்  அவரது தந்தைக்கு கோட்டம் திறக்கிறார். இதுதான் இந்த அரசின் நிர்வாக நிலைமை.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்த செந்தில்பாலாஜியை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர் பதவியை விட்டு நீக்கினார். அதன் பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில், செந்தில்பாலாஜி வீட்டில் காவல்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில்

அப்போது 2016-ல், இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கிற ஸ்டாலின், கரூர் ஜமீன்தாராக இருக்கும் செந்தில்பாலாஜியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், எங்கள் ஆட்சி வந்தால் அவரை கைது செய்வோம் என்று முழக்கமிட்டார். ஆனால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தி.மு.க.வில் இணைந்த பிறகு அவர் மீது கைது நடவடிக்கையும் இல்லை. திமுக அரசு, அவரை காப்பாற்ற பார்க்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அமலாக்கத்துறை வந்துள்ளது. ஆனால் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறை, செந்தில்பாலாஜியை இன்னும் எத்தனை நாட்கள் காப்பாற்ற போகிறீர்கள் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காவல்துறை மீது உச்சநீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரம் உங்களை எத்தனை நாட்கள் காப்பாற்றும்.
உங்கள் முழு ஆட்சியையும் பயன்படுத்தினாலும் செந்தில்பாலாஜியை யாராலும் காப்பாற்ற முடியாது. ஸ்டாலின் அவர்களே, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள். செந்தில்பாலாஜி வாய் திறந்தால், அடுத்து சிறையில் இருப்பது ஸ்டாலின் குடும்பம்தான். அவரை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால்
ஒரு மதுபாட்டிலுக்கு செந்தில்பாலாஜி 10 ரூபாய் வாங்கியுள்ளார். அதில் 2 ரூபாய் அவர் எடுத்துக்கொண்டார். மீதி 8 ரூபாய் யாரிடம் கொடுத்தார். ஸ்டாலின் குடும்பத்திற்கு பணம் சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. நீங்கள் குற்றமற்றவர்கள் என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே?


அதிசய மனிதர்
இருதயத்தில் 3 இடங்களில் 90 சதவீத அடைப்பு ஏற்பட்டு 8 நாட்களாக உயிரோடு இருக்கிற ஒரு அதிசய மனிதர் தமிழ்நாட்டிலேயே செந்தில்பாலாஜி மட்டும்தான்.

விசாரணை தள்ளிப்போகும் என்பதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்க தாமதிக்கிறார்கள். குற்றவாளிக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் செயல்படுகிறார். அவரை முதலில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். செந்தில்பாலாஜியை விசாரித்தால் தானும், இந்த அரசும் மாட்டிக்கொள்வோம் என்று கருதி அவரை காப்பாற்ற ஸ்டாலின் துடிக்கிறார். ஆனால் ஸ்டாலினை பற்றி ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். அவரை பொறுத்தவரை தனக்கு ஆபத்து என்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரை காவு கொடுத்து விடுவார். இது வரலாறு. உதாரணத்திற்கு அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தோடு தற்கொலை, சாதிக்பாஷா தற்கொலை சம்பவங்களை கூறலாம். இந்த நிலைமைதான் செந்தில்பாலாஜிக்கும் ஏற்படப்போகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இல்லாத வசதியா காவிரி மருத்துவமனையில் இருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் அம்மருத்துவமனை செயல்படுகிறது.
செந்தில்பாலாஜி அவர்களே, இல்லாத இருதய நோய்க்காகவும், ஸ்டாலின் குடும்பத்தை காப்பாற்றவும், உச்சநீதிமன்றத்தில் இருந்து தப்பிக்கவும் இருதயத்தை அறுப்பதால் ஆயுள்தான் குறைவு, பார்த்துக்கொள்ளுங்கள். கருணாநிதி குடும்பம் உங்களை காப்பாற்றும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.


விலைவாசி உயர்வு
இந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஏதாவது திட்டங்களை செய்து இருக்கிறதா? தந்தைக்கு பேனா சின்னம் வைத்தால், கோட்டம் திறந்தால் போதுமா? இதற்குத்தான் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கிறார்கள். 2 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதைப்பற்றி ஸ்டாலின் பேசுகிறாரா? வீட்டு வரி பன்மடங்கு உயர்வு, வணிக வளாகங்களுக்கு வரி உயர்வு, கிராமப்புற குடிசைகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சாலை வரி உயர்வு இதற்கெல்லாம் காரணமான தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ஊழலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசு அகற்றப்பட வேண்டும்.

சிவி சண்முகம் பேச்சு


தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பள்ளி மாணவிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து வருகிறது. அதற்கு காரணம் போதைப்பொருள், கஞ்சா, கலப்பட சரக்கு. இவற்றையெல்லாம் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இங்கிருக்கிற ஒரு அமைச்சர், சாராய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறார். மற்றொரு அமைச்சர், மற்ற சமூகவிரோதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்.
பதவியை விட்டு நீக்குங்கள்
தற்போது கலால் துறைக்கு புதியதாக அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற முத்துசாமி அவர்களே நீங்கள் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள், செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட நிலைமை நாளை உங்களுக்கும் வரலாம், எச்சரிக்கையாக இருங்கள். ஸ்டாலின் அவர்களே, தமிழகத்தில் கள்ள மதுபானத்தை ஒழிப்பேன் என்று உங்கள் மகன் உதயநிதிக்கு கலால்துறையை தைரியமாக கொடுக்க வேண்டியதுதானே? தமிழகத்தை முன்னணி மாநிலமாக கொண்டு வருவேன் என்று ஸ்டாலின், வாயாலே வடை சுட்டு வருகிறார்.

உங்களால் ஆட்சி செய்ய முடியவில்லை என்றால் ஓடிவிடுங்கள், இல்லையென்றால் உங்களை மக்கள் விரட்டியடிக்கும் காலம் விரைவில் வரும். தற்போது இரவு நேரம் வந்தாலே எல்லா அமைச்சர்களும் பயத்தில் உள்ளனர். மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள். ஏழை, எளிய மக்கள், மாணவர்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றுங்கள், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்துங்கள். என்று பேசினார்.

Share This Article
Leave a review