அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.
புத்தகப் பாடங்களை மட்டுமல்லாமல் சமூக கல்வி மற்றும் மாணவர்களிடையே தனித்திறன் போன்றவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு அடையாளமாக பள்ளி சுவர்களில் புலவர்களின் புகைப்படங்களை வண்ண ஓவியங்களாக தீட்டி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு பண்புகளையும் கற்பித்து வருகிறார்கள். பாடப்புத்தகங்களில் இடம்பெறும் புலவர்கள் இளங்கோவடிகள், திருவள்ளுவர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட தமிழ் புலவர்களின் படங்களை ஓவியமாக தீட்டி அவர்களை நினைவு கூறும் விதமாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி ஆசிரியர்களையும், மாணவர்களையும் வெகுவாக பாராட்டினார்.
இயற்கை அழகு சூழ்ந்த அரசமங்கலம் பள்ளியில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கல்வி கற்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் கோபு சிறப்பாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் வழி நடத்தி வருகிறார்.

தான் வேலை செய்கிற ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் மாணவர்கள் இடையே உள்ள இடைவெளியை தகர்த்து இயல்பாக பழகி பாடம் நடத்தி வருகிறார் தமிழ் ஆசிரியர் ஹேமலதா. இவரின் சிறந்த பணியினை பாராட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி “மான் கி பாத்” என்னும் நிகழ்ச்சியில் இவரை பாராட்டி பேசினார். என்பது குறிப்பிடத்தக்கது.
அரசமங்கலம் அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களோடு நெருங்கி பழகி இயல்பாக பாடம் நடத்தி வருவது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையும் தருகிறது.