டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மணிப்பூர்
டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கடுமையான வன்முறை நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இணையச் சேவையும் முடக்கப்பட்டது. இருந்த போதிலும் வன்முறை தொடர்ந்தே வந்தது.

இதனால் மாநிலத்தில் மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் இருக்கும் இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த இரண்டு நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாங்கள் நீதி வழங்குவோம் என்று குறிப்பிட்ட நீதிபதி, மணிப்பூரில் இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும் கூட விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய தினமும் தலைமை நீதிபதி தொடர்ச்சியாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மணிப்பூர் அரசு செயலிழந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். மணிப்பூர் பெண்கள் பலாத்காரம்- FIR எப்போது பதிவானது என்ற நீதிபதி மணிப்பூர் வன்முறை இரண்டு மாதங்களாக மாநில அரசு அலட்சியமாக இருந்ததாகவும் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், இதில் நீதிபதி அதிரடி உத்தரவையும் பிறப்பித்தார். சட்ட ஒழுங்கில் திருப்தி இல்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, மணிப்பூர் டிஜிபி தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வரும் 4ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இந்த அமர்வு கூடும் என்றும் அப்போது தனிப்பட்ட முறையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.