“படிப்பை என்னுடைய சொத்தாக நான் நினைத்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாச்சு” என்று +2 வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தச்சு தொழிலாளரின் மகள் நந்தினி தெரிவித்துள்ளார் .
திண்டுக்கல் பகுதியில் தச்சு வேலை செய்து வருபவர் சரவணகுமார் இவருக்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பு பாலபிரியா என்பவருடன் திருமணமாகி , நந்தினி மற்றும் பிரவீன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர் .
இதில் அவரது மூத்த மகள் நந்தினி திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வந்துள்ளார் .

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வில் நந்தினியும் பங்குகொண்டு தேர்வுகளை எழுதினர் . இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இதில் மாணவி நந்தினி தமிழ்,ஆங்கிலம் கணினி பயன்பாடு, பொருளியல் , கணக்குப்பதிவியல் , வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார்.
இதன்மூலம் திண்டுக்கல் மாவட்ட அளவிலும் தமிழகத்தில் மாநில அளவிலும் முதலிடம் பெற்றுள்ளார்.

தனது இந்த சாதனை அவரது பெற்றோர்கள் இல்லாமல் நடந்திருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் பேசுகையில் “எப்பவுமே படிப்பு தான் சொத்து-ன்னு சொல்லி எங்க வீட்டில் வளர்த்தாங்க . படிப்பை என்னுடைய சொத்தாக நான் நினைத்ததால்தான் இந்த வெற்றி சாத்தியமாச்சு” என்று நந்தினி தெரிவித்தார் .
மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால். தலைமை ஆசிரியர் அகிலா,தமிழ் ஆசிரியர் அனுராதா,ஆங்கில ஆசிரியர் தீபா,மரிய சாந்திராஜலட்சுமி,அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்து தற்போது அதிக மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.
தச்சு தொழிலாளரின் மகளான நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள நிகழ்வு உழைக்கும் நடுத்தர மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது . தங்கள் பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து நந்தினி போல் ஒரு சாதனையாளராக மற்ற வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் நந்தினியை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .