‘தி கிரேட் டிக்டேட்டராக’ நினைத்துக் கொள்ள வேண்டாம்! ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்.!

4 Min Read
ஆளுநர் ஆர்.என்.இரவி

உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என்பது ஒரு பழமொழி. இன்றைய தேதியில் ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு இதை விடப் பொருத்தமான அறிவுரை இருக்க முடியாது. நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் பண்ணாமல் இருங்கள் என்பதுதான் அதற்கான விளக்கம்!

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் தமது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று
ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் இவர். அவர்களிடம் சொல்லி தமிழ்நாட்டுக் கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் தரலாம். புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம். மாநில ஆட்சிக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால் அது எதையும் ஆளுநர் ஆர்.என்.இரவி செய்யத் தயாராக இல்லை. அதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.

மாறாக, தினந்தோறும் யாரையாவது கூட்டி வைத்துக் கொண்டு அவர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும். தவறில்லை. அதில் மொத்தமும் தவறான பாடங்களைச் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறார். விழாக்களுக்குச் செல்கிறார். செல்லட்டும். ஆனால் விதண்டாவாதக் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அவரது அபத்தக் களஞ்சியங்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் மறுப்பு வெளியாகி வருகிறது. அதை எல்லாம் அவர் படித்துப் பார்க்கிறாரா? என்று தெரியவில்லை. படித்திருந்தால் மறுபடியும் அதே அபத்தங்களை உதிர்க்க மாட்டார்.

கற்பனாவாத வேத காலத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அப்பாவி இளைஞர்களைப் பயிற்றுவிக்கச் சொல்லும் அர்த்தமற்ற கருத்துகளை ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு
ஆர்.என்.இரவி சொல்வது தான் கடுமையான கண்டனத்துக்குரியதாக பொதுவெளியில் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி மீது தனது கோபத்தை இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறார் அவர். பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட பதவிதான் ஆளுநர் என்பதாகும். அதில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஐ.பி.எஸ். அந்த வேலையில் தான் அவர் இருந்தும் இருக்கிறார். பிறகு ஏன் இத்தனை அவியல்?

ஏனென்றால், ‘அனைவருக்கும் பொதுவான சட்டத்தை’ பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிவிட்டது. அதுதான் இவர்களுக்கு இருக்கும் கோபம் ஆகும். ஜாதிக்கொரு நீதி சொல்லும் மனுச் சட்டத்தை தூக்கித் தூர வைத்துவிட்டு. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தையும், குற்றச் சட்டத்தையும் உருவாக்கியது பிரிட்டிஷ் ஆட்சி. அதனால்தான் இவர்களுக்கு அந்த ஆட்சி மீது கோபம். ‘சீர்திருத்தம் செய்ய பிரிட்டிஷார் தொடங்கியதால் தான் அந்த ஆட்சியை ஆரியர்கள் எதிர்த்தார்கள், மற்றபடி விடுதலைக் காக அல்ல’ என்று தந்தை பெரியார் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

வர்ணாசிரம காலத்தை உருவாக்க ஒரு கூட்டம் துடிக்கிறது. அந்தக் கூட்டத்தின் பிரதிநிதியாக ஆளுநர் இருக்கிறார். வர்ணத்தையும். சனாதனத்தையும் ஆதரித்து அவர் பேசி வருவதே அத்துமீறல் தான்.
‘ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியா ஜாதி – இனம் என பிளவுபட்டது’ என்று 21.2.2023 அன்று பேசினார் ஆளுநர்.
ரிக் வேதத்தில் இல்லையா நால்வர்ணம்? ‘நான்கு ஜாதிகளை நானே உருவாக்கினேன்’ என்று சொல்லவில்லையா கீதை? ‘திராவிடம்’ உள்ளிட்ட தேசங்களை ஆண்டவர்கள் சூத்திரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொன்னது மனுநூல்தானே? இவை அனைத் தையும் மறைக்கும் வகையில் பேசினார். மக்கள் மத்தியில் வர்ணாசிரம – ஜாதியவாதத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமாக ஆகிவருவதைப் பார்த்ததும், ‘இதெல்லாம் எங்கள் சரக்கு அல்ல’ என்று சொல்லி வருகிறார்கள். இத்தகைய நோக்கம் கொண்ட ஒருவர் ‘திராவிட மாடல்’ ஆட்சியை எப்படி ஏற்றுக் கொள்வார்?

தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒட்டுமொத்த நன்மைகளை உருவாக்கித் தரும் ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இருக்கிறது.
‘அனைவருக்குமான’ ஆட்சியாக இது இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான ஆட்சியாக இருக்கிறது. தமிழ்நாடும் வளர்கிறது. தமிழர்கள் அனை வரும் வளர்ந்து வருகிறார்கள்.
இதனைக் காணப் பொறுக்கவில்லை. அதன் அடையாளமாகவே ஆளுநர் மாறிவிட்டார்.

குடைச்சலை பல்வேறு வழிகளில் கொடுத்து வருகிறார். ஒரு சட்டத்துக்கு அனுமதி தருவது, காலதாமதம் செய்வது என்பதை நிர்வாக தாமதமாக மட்டும் யாரும் கருத வேண்டாம்.
இதற்குள் பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன. மக்களுக்கான நன்மைகளை மட்டுமே சிந்தித்துச் செயல்படும் இந்த ஆட்சியின் கவனத்தைத் திசை திருப்பி மடைமாற்றம் செய்வதுதான் இதனுள் இருக்கும் நோக்கம் ஆகும்.
நன்மைகள் செய்யும் அரசின் கவனத்தை வேறொரு பக்கம் திருப்பி. நன்மைகள் நடந்துவிடாமல் தடுக்கும் தந்திரமே இவை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு இணையாக நியமன ஆளுநர் பதவியை உயர்த்திக் காட்டும் தந்திரமாக இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
பொதுவெளியில் உச்சரிக்கப்படும் அபத்தக் கருத்துகளுக்குப் பின்னால் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் எண்ணமும் சேர்ந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.

முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு தீர்ப்பினை மேற்கோள் காட்டி இருந்தார்கள்.
“Shamsher Singh v. State of Punjab” (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “The constitutional conclusion is that the Governor is but a shorthand ex pression for the State Government and the President is an abbreviation
for the Central Government.” என்று சொன்னது.
அதாவது, மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று சுருக்கமாகச் சொன் னார்கள். அதனை மறந்துவிட்டு.
‘தி கிரேட் டிக்ரேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம் – என்று அறிவுறுத்தி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.
இதை ஆளுநர் உணர்ந்தாக வேண்டும். இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review