கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல் செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.இந்த டாஸ்மாக் கடை அருகே பார் இல்லை. இதனால் இங்கு வந்து பாட்டில் வாங்கும் குடிமகன்கள் திறந்தவெளி, பெட்டி கடையின் இடுக்கு பகுதியிலும் நின்று மது குடிப்பதாக கூறப்படுகிறது.மேலும் போதை ஏறியதும் அவர்கள் அலங்கோலமாக வீதியில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் பலர் போதையில் ரகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் பயத்தில் உள்ளனர்.

இவர்கள் மீது புகார் கொடுக்க யாரும் முன் வராததால் ‘குடி’மகன்களின் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை என்று புலம்புகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று மாலை அங்கு திரண்டனர். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அவர்கள் சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி 41 வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதமே மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதாகவும் அங்கு ஒரு மயானமும் இருப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் எனவும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உடனடியாக அந்த டாஸ்மார்க் மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். போலீசார் கலெக்டருடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்ததால் அங்கு திரண்டிருந்த பெண்கள் அப்புறம் கலைந்து சென்றனர்.