வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் செய்யும் போது வங்கிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, சிவசேனா கட்சி எம்பி., பாஜிராவ் மானே,வங்கி கடன் வசூல் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: சில வங்கிகள் வாரக் கடன் வசூலில் காட்டும் கெடுபிடி தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளன. அனைத்து பொதுத் துறை வங்கிகளும் கடன் வசூலில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது. மாறாக, வங்கிகள் கடும் வசூலில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆகவே இந்த விஷயத்தை உணர்வுபூர்வமாக அணுக வேண்டும். ஏழை மக்கள் கடன் வளைக்குள் சிக்காமல் இருக்க ’பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா‘ வை அரசு செயல்படுத்துகிறது. தனியார் அடகு கடைக்காரர்களிடமிருந்து மக்களை காக்கவே திட்டம் உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
வங்கி கடன் குறித்து தெலுங்கானா எம்பி., எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நிதி அமைச்சர், ”இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த மூன்று மாதம் வரை தமிழகத்தின் மொத்த கடன் தொகை 7.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இரண்டாவது இடத்தில் உ.பி.யும், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது“ என்றார்.