இடது சாரி இயக்கத்தின் அடையாளமுமான தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “சுதந்திர போராட்ட வீரரும், இடது சாரி இயக்கத்தின் அடையாளமுமான தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்குமான பேரிழப்பாகும்.

80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் மாணவராக, கட்சித் தலைவராக, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக, விவசாய சங்க தலைவராக தன் இறுதிக்காலம் வரை சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள் ஆற்றிய மக்கள் பணிகளும், மகத்தான தியாகமும் என்றென்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.