மாத சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவாக உள்ள அரசு பள்ளி ஆசிரியரிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியை சேர்ந்தவர் சங்கர்.இவர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். (தற்பொழுது தலைமறைவு). இவரது மனைவி மாதவி களம்பூர் தொடக்கப் பள்ளியில் இளநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.(தற்பொழுது திருவண்ணாமலை அடுத்த கண்டியாங்குப்பம் கிராமத்தில் பணிபுரிந்து வருகிறார்).

அரசு பள்ளி ஆசிரியர்களான தம்பதியினர் இருவரும் இணைந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக களம்பூர்,ஆரணி, சென்னை, பெங்களூரு, முக்குறும்பை, இலுப்பகுணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களில் மாத ஏல சீட்டு நடத்துவதாக சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் பெற்று ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
அதே வேளையில் மாத சீட்டு முடிந்த வாடிக்கையாளர்களுக்கு சீட்டுத் தொகை வழங்காமல் தம்பதியினரே வைத்துக்கொண்டு அதன் மூலமாக வட்டி கொடுப்பதாகவும் அதுமட்டுமின்றி தங்களிடமே சீட்டு கட்டுவதற்கு இந்த வட்டி தொகையை எடுத்துக் கொள்வதாகவும் கூறி பல வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்று வித்தைகளையும் அரங்கேற்றி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களுக்கு சொந்தமாக களம்பூரில் இருந்த 6 வீட்டு மனைகளை மொத்தமாக தம்பதியினர் விற்றுவிட்டு சங்கர் மட்டும் தலைமறைவாகி விட்டு அவரது மனைவி திருவண்ணாமலையில் உள்ள தென்றல் நகரில் குடியேறினார்.

இதை சற்றும் எதிர்பாராத வாடிக்கையாளர்கள் களம்பூரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்ட போது தான் சங்கர் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
இது குறித்து பேசிய அவர்கள்..,கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4- ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தம்பதிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மாத ஏல சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு பணத்தை மீட்டு தராமல் காவல்துறையினர் அலைகழிப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் கண்ணீர் மல்க குற்றம் சாட்டினர்.