தீபத் திருவிழாவை ஒட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயிலில் வரும் 26 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள், தேரோட்டம் வருகிற 23 ஆம் தேதியும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 26 ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மகா தீப தரிசனத்தை காண தமிழக மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையார் ஆலய கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று திருவண்ணாமலை வந்தார். பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்லும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, போலீஸ் அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகே வந்த அவர், கோவிலின் முன்பு தீபம் ஏற்றக்கூடிய இடம், கட்டண தரிசனத்தில் அமரக்கூடிய பக்தர்கள் இருக்கைகள், அமைக்கப்பட உள்ள இடம் முக்கிய பிரமுகர், அமர்ந்த தீப தரிசனம் காணக்கூடிய இடம், ஆகிய இடங்களில் பார்வையிட்டூ ஆய்வு செய்தார். அதன் பின் தீப தரிசனம் முடிந்த பின்பு பக்தர்கள் வெளியேறும் வழியையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தீபத் திருவிழாவில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தினார்.