உலகில் நடக்கும் பல்வேறு நூதன மோசடிகளை சதுரங்க வேட்டை என்ற தமிழ் படம் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியது என்று கூறலாம் . இந்த படத்திற்கு தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ள சூழ்நிலையில் , சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு நூதன மோசடி திருப்பூரில் அரங்கேறியுள்ளது . மூளை கேன்சரை குணமாக்கும் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இந்தியாவின் இமயமலை பகுதியில் அதிக அளவில் கிடைப்பதாகவும் அதனை ஆப்ரிக்கா நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதாக திருப்பூரை சேர்ந்த நபருக்கு தொலைபேசியில் குறுந்தகவல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனை நம்பி அந்த நபர் , குறுந்செய்தியில் கொடுக்கப்பட்ட தொடர்பு எண்களை தொடர்பு கொண்டபொழுது
உகாண்டாவை சேர்ந்த பெண் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களுக்கு கிருஷ்ணா எண்டர்பிரைசஸில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கப்படுவதாகவும், ஏற்கனவே தங்களுக்கு இந்த மூலப்பொருட்களை சப்ளை செய்த நபர் தற்பொழுது இறந்து விட்டதாகவும் , அவர்களுக்கு மூலப்பொருட்கள் மிக அவசரமாக தேவைப்படுவதால் , அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் மூலப்பொருட்களை வாங்கி வைத்து கொண்டு தங்களுக்கு தகவல் தெரிவித்தால் இந்தியா வந்த பின்னர் அதனை அதிக விலைக்கு தாங்களே எடுத்துச் செல்வதாகவும் அதற்கான கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்கள்.
இதனை நம்பிய திருப்பூரை சேர்ந்த நபர் குறிப்பிட்ட போலி நிறுவனத்தை தொடர்பு கொண்டு 98 லட்சத்தி 28 ஆயிரம் ரூபாய்க்கு மூலப்பொருள் மூலிகை என பொய்யான பொருட்களை வாங்கி உள்ளார். ஆனால் அது வரை தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் கிடைக்காமல் போக்கு காட்டி உள்ளனர். சில நாட்களில் வாங்கிய பொருள் வீணான போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இது தொடர்பாக, திருப்பூர் மாநகர சைபர் போலீசில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்து 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை முடக்கம் செய்தனர்.
மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் உமேஷ் என்ற குற்றவாளியை மும்பையில் வைத்து கைது செய்து திருப்பூர் அழைத்து வந்துள்ளனர்.