குஜராத் மாநிலத்திலுள்ள சூரத் சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவிலிருந்து பயணித்த மூன்று பயணிகள் மற்றும் ஒரு அதிகாரியிடம் இருந்து ₹25 கோடி மதிப்பிலான 48.2 கிலோ தங்கப் பசையை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைப்பற்றியுள்ளது.
நான்கு பேரையும் கைது செய்ததன் மூலம் கடத்தலை முறியடித்துள்ளதாக டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“ரகசிய தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள் ஜூலை 7 ஆம் தேதி சூரத் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எண். IX 172 மூலம் ஷார்ஜாவிலிருந்து வந்த மூன்று பயணிகளை சோதனை செய்ததில் இந்தியாவிற்கு கடத்துவதற்காக பேஸ்ட் வடிவில் தங்கத்தை எடுத்து வந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக “ஜூலை 9 அன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது .
அவர்களது உடமைகளை சோதனை செய்த போது ஐந்து கருப்பு பெல்ட்களில் மறைத்து வைத்திருந்த பேஸ்ட் வடிவிலான 43.5 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர் .

சூரத் சர்வதேச விமான நிலையத்தில் அங்கு பணியிலிருந்த விமான நிலைய அதிகாரி ஒருவரின் உதவியுடன் தங்கத்தை கடத்த திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதிகாரிகள் சோதனை மற்றும் பரிசோதனையைத் தவிர்ப்பதற்காக குடிவரவு (இம்மிகிரேஷன்) சோதனைச் சாவடிக்கு முன்பாக அமைந்துள்ள கழிவறையில் தங்கம் பரிமாற்றம் செய்ய திட்டமிட்டிருந்ததை அதிகாரிகள் முன்னதாகவே தடுத்து நிறுத்தியுள்ளனர் .
இந்த அதிரடி நடவடிக்கையால் 4.67 கிலோ பேஸ்ட் வடிவிலான தங்கம் அடையலாம் தெரியாத நபர்களால் குடிவரவு சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் விட்டுச்செல்லபட்டுள்ளது , இதனை பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் மீட்டு புலனாய்வு அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளனர் .
நடத்தப்பட்ட சோதனையில் பயணிகளிடம் இருந்து மொத்தம் 48.20 கிலோ தங்க பேஸ்ட் பிரித்தெடுக்கப்பட்டு, சுமார் ₹25.26 கோடி மதிப்புள்ள 42 கிலோ தங்கம் (99% தூய்மையான தங்கம் ) கைப்பற்றப் பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப் பட்டுவருகின்றது . எனினும் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகள் மற்றும் ஒரு விமான நிலைய அதிகாரியின் பெயர் மற்றும் பிற விவரங்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ரகசியமாகவே வைத்துள்ளனர் .