தண்டேவாடா தாக்குதலில் 10 வீரர்கள் உட்பட 11 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்படப் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவின் ஆர்னபூர் என்ற பகுதியில் , மாவோயிஸ்ட்டுகள் நடத்திய IED வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த 10 பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு வாகன ஓட்டுநர் கொல்லப்பட்டனர்.

தண்டேவாடாவின் அரன்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு வீரர்கள் அங்குச் சென்று , அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேடுதல் பணியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புப் படையினரின் வாகனம் , மாவோயிஸ்ட்டுகள் புதைத்து வைத்திருந்த IED வெடிகுண்டு மீது ஏறி வெடித்துச் சிதறியது .இந்த வெடிகுண்டினை யாரும் கண்டுபிடிக்காத முடியாத வண்ணம் , மாவோயிஸ்ட்டுகள் தார்ச் சாலையின் உட்புறம் புதைத்து வைத்துள்ளனர் .
கொல்லப்பட்ட வீரர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு இறுதி மரியாதை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவம் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்விட்டரில் , டிஆர்ஜி வீரர்கள் மீதான தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது என்றும், உயிரிழந்த ஆத்மாக்களுக்கு நாம் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அம்மாநில மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் “சத்தீஸ்கர் காவல்துறை மீது தண்டேவாடாவில் நடந்த கோழைத்தனமான தாக்குதலால் மனவேதனை அடைந்துள்ளேன் அம்மாநில முதல்வரைத் தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதளித்துள்ளேன், மேலும் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் நக்சலைட் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அதிகாரிகளுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார் . “நக்சலைட்டுகளை ஒடுக்க அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , தண்டேவாடா தாக்குதலுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் .
இதற்கிடையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கர் ஐஜி சுந்தராஜ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தற்பொழுது மத்திய ராணுவப் படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் .