உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி திரில் வெற்றி பெற்றது . அத்துடன் புல்லிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
13 – வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதுதிக்கு முன்னேறும். அரையிறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும். இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி , தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது.
தென் ஆப்பிரிக்கா அணியில் கடந்த ஆட்டங்களில் ஆடாத கேப்டன் பவுமா திரும்பினார். ரபடா முதுகு வலி காரணமாக விலகினார். ரீஜா ஹென்ரிக்ஸ், லிசாத் வில்லியம்ஸ் நீக்கப்பட்ட தப்ரைஸ் ஷம்சி, இங்கிடி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. காய்ச்சல் காரணமாக அசன் அலி ஒதுங்கினார். உஸ்மா மிர் வெளியேற்றப்பட்டார். அவர்களுக்கு பதிலாக முகமது நவாஸ், முகமது வாசிம் இடம்பெற்றனர்.

டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களம் கண்ட அப்துல்லா ஷபிக் 9 ரன்னிலும், இமாம் உல் ஹக் 12 ரன்னிலும் மார்க்கோ யான்சன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் பத்து ஓவர்களில் மார்க்கோ யான்சன் சாய்த்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்தார். கேசவ் மகராஜ் பந்து வீச்சில் சிக்ஸர் தூக்கிய முகமது ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த இப்திகர் அகமது 21 ரன்களில் வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய பாபர் அசாம் அரை சதம் எட்டி ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து ஷதப் கான் , சாத் ஷகீலுடன் கைகோர்த்தார். இருவரும் வேகமாக மட்டையை சுழற்றினார். ஷதப் கான் 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். நிலைத்து ஆடிய ஷகீல் அரை சதம் அடித்து வெளியேறினார். பின்னர் வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 270 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி ஆடியது. இந்த அணி 47.2 ஓவர்களில் 271 எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. அத்துடன் 5 போட்டியில் வென்று 10 புள்ளிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணியின் நான்காவது தோல்வி இதுவாகும்.