சென்னை: நடப்பு உலகக் கோப்பை கிரிகெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் பாபர், 92 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். அப்துல்லா ஷஃபீக் 58 ரன்கள், ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் அஹமத் தலா 40 ரன்கள் எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இளம் வயது வீரர் இவர். ஷஃபீக், ரிஸ்வான் மற்றும் பாபர் விக்கெட்களை அவர் வீழ்த்தி இருந்தார்.

283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. சென்னை மைதானத்தில் இந்த ரன்களை ஆப்கானிஸ்தான் வெற்றிகரமாக சேஸ் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நால்வரும் சிறப்பாக ஆடி வெற்றியை வசமாக்கினர்.
தரமான பேட்டிங்: ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரானும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹ்மனுல்லா குர்பாஸ், 53 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரஹ்மத் ஷாவுடன் இணைந்து இப்ராஹிம் ஸத்ரான் 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். இப்ராஹிம் ஸத்ரான் 113 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாய்தி களம் கண்டார்.

ஹஷ்மதுல்லா ஷாய்தி மற்றும் ரஹ்மத் ஷா இணைந்து ஆட்டத்தை இறுதி வரை நகர்த்தி சென்றனர். 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கனுக்கு வெற்றி தேடி தந்தனர். ஆட்ட நாயகன் விருதை இப்ராஹிம் ஸத்ரான் வென்றார். வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் சென்னை மைதானத்தை வலம் வந்து பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.